Oct 28, 2026 - 01:02 PM
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்

தலவாக்கலையில் 5 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாகவும், அத்திருட்டுச் சம்பவத்தின் காட்சிகள் சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், இது குறித்து தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை நகரில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பாதுகாப்பு கேமரா கட்டமைப்புகளை விற்பனை செய்து பொருத்தும் வர்த்தக நிலையம் ஒன்றில் இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 25 ஆம் திகதி இரவு குறித்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கிருந்த கையடக்கத் தொலைபேசிகள், பணம் மற்றும் தங்க மோதிரம் ஒன்றைத் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் மொத்தப் பெறுமதி ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா கட்டமைப்பில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

































