Oct 26, 2026 - 07:00 PM

ஹபராதுவ புகையிரதக் கடவையில் பேருந்து ஒன்று புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை எதிர்வரும் (06) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதிவான் மகேஷிகா விஜேதுங்க இன்று (26) உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் கெஸ்பேவையைச் சேர்ந்த 40 வயதுடைய பேருந்து சாரதியும், மகரகமையைச் சேர்ந்த 21 வயதுடைய பேருந்து நடத்துனருமாவர்.
கொலை முயற்சி, பிறரின் உயிர்க்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயற்பட்டு காயங்களை ஏற்படுத்துதல், பொது வீதியில் ஆபத்தான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனத்தைச் செலுத்துதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்களை ஹபராதுவை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
இதேவேளை ஹபராதுவ - கொக்கல பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் புகையிரதத்துடன் மோதிய பேருந்தின் வீதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கல்விச் சுற்றுலாவுக்காகச் விசேட சுற்றுலா அனுமதிப்பத்திரம் பெறப்படாமல் பேருந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையினால் அந்த அனுமதிப்பத்திரம் தடை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், விபத்து ஏற்பட்ட போது அந்த பேருந்தை செலுத்திய சாரதி, குறித்த பேருந்துக்காகப் பதிவு செய்யப்பட்ட சாரதி அல்ல என்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன், ஹபராதுவ - கொக்கல பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் குறித்த பேருந்து மோதி நேற்று (25) பிற்பகல் விபத்து ஏற்பட்டது.
கொட்டாவை பகுதியைச் சேர்ந்த தனியார் கல்வி நிலையத்தின் மாணவர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதுடன், விபத்தில் பேருந்தில் பயணித்த 13 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

































