Oct 26, 2026 - 08:12 PM

களனி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் தற்போது குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் களனி கங்கை தாழ்நிலப்பகுதிகளில் சிறியளவான வௌ்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நிலவும் மழை நிலைமை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்மானித் தரவுகளின் பகுப்பாய்வுகளுக்கு அமைவாக இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
இதற்கமைய, ருவான்வெல்ல, சீதாவக்கை, தொம்பே, தெஹியோவிட்ட, எஹெலியகொட, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கொஹுபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழை மேலும் தீவிரமடைந்தால், ஹங்வெல்ல பகுதிக்குக் கீழ் உள்ள களனி கங்கை பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளுக்கும் இந்த வெள்ள நிலைமை பரவுவதற்கு வாய்ப்புள்ளதால், உரிய அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
































