Oct 26, 2026 - 06:34 PM

கொழும்பிலுள்ள அமெரிக்க மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர், அமெரிக்க கடற்படையின் பட்டப்பின் கற்கைகள் கல்லூரியின் (NPS) முதுமானிப்பட்டமொன்றினை இலங்கைக் கடற்படையினைச் சேர்ந்த லெஃப்டினன்ட் கொமாண்டர் பியுமி கத்ரிஆரச்சிக்கு வழங்கி வைத்தார். இலங்கைக் கடற்படையின் பயிற்சிகள் பிரிவின் பணிப்பாளர் நாயகமான ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் மற்றும் ஊடகப் பணிப்பாளர் கொமாண்டர் சி.ஆர்.பி. வலாகுலுகே ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
“லெஃப்டினன்ட் கொமாண்டர் பியுமி கத்ரிஆரச்சியின் சாதனைகள், அவரது அசாதாரண அர்ப்பணிப்பையும் உலகத்தரம் வாய்ந்த அமெரிக்க இராணுவக் கல்வியின் மதிப்பையும் பிரதிபலிக்கின்றன. அமெரிக்க நிதியுதவியுடன் கூடிய பயிற்சியின் ஊடாக அறிவினையும், திறன்களையும் பெற்றுக்கொண்ட அவர், இலங்கைக் கடற்படையினைப் பலப்படுத்துவதற்காக அவற்றைத் தம்முடன் எடுத்து வருகிறார். எமது பங்காளர்களின் தொழில்வாண்மைத்துவ அபிவிருத்தியில் முதலீடு செய்வதானது, எமது பாதுகாப்பு ஒத்துழைப்பினை எவ்வாறு
பலப்படுத்துகிறதென்பதையும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தை மேலும் பாதுகாப்பானதாகவும், உறுதியானதாகவும் மாற்றுவதற்கு எவ்வாறு பங்களிப்புச் செய்கிறது என்பதையும் அவரது வெற்றி எடுத்துக்காட்டுகிறது.” என அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.
தலைமைப் பதவிகளுக்கு இராணுவ மற்றும் பாதுகாப்புத் தொழில்நிபுணர்களைத் தயார் செய்யும், கலிபோர்னியாவின் மொன்டரேயிலுள்ள முதுகலைக் கற்கைகளுக்கான ஒரு பல்கலைக்கழகமான பட்டப்பின் கற்கைகள் கல்லூரியில் (NPS), LCDR கத்ரிஆரச்சி தனது வகுப்பில் கிட்டத்தட்ட முதலிடத்தில் பட்டம் பெற்றார்.
4.0 இற்கு 3.98 எனும் தரப்புள்ளி சராசரியினைப் (GPA) பெற்று பாதுகாப்பு ஏற்பாட்டியல் முகாமைத்துவ கற்கைநெறியினை அவர் சிறப்பு சித்தியுடன் நிறைவுசெய்தார். அது கிட்டத்தட்ட ஒரு முழுமையான மதிப்பெண் ஆகும். அத்துடன் அவர், NPS சிறந்த ஆய்வறிக்கைக்கான விருதையும், கிவானிஸ் கிளப்பின் சிறந்த மொன்டரே சர்வதேச மாணவர் விருதையும் பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு NPS சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமே இந்த விருதை அந்த கிளப் வழங்குகிறது. அவரது கல்விக்கான நிதியுதவிதவியானது, இலங்கை இராணுவ அதிகாரிகள் தமது சேவைகளை பலப்படுத்துவதற்கும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பினை ஆழப்படுத்துவதற்கும், தமது தாய்நாட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய திறன்களையும் நிபுணத்துவத்தையும் வளர்த்துக்கொள்வதற்கு உதவி செய்யும் அமெரிக்க சர்வதேச இராணுவக் கல்வி மற்றும் பயிற்சி (IMET) நிகழ்ச்சித் திட்டத்தினால் வழங்கப்பட்டது.
உதிரிப்பாகங்களின் பெறுகை நடைமுறைகளில் இலங்கைக் கடற்படை எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான LCDR கத்ரிஆரச்சியின் விருது பெற்ற ஆய்வானது, அமெரிக்க இராணுவக் கல்வியானது, இலங்கை அதிகாரிகளுக்கு தமது தாய்நாட்டில் பயன்படுத்தக்கூடிய நடைமுறை நிபுணத்துவத்தை வழங்கி, அதன் மூலம் கடற்படையின் தயார்நிலையினையும், எமது இருதரப்பு இராணுவ பங்காண்மையினையும் பலப்படுத்துவதற்கு அது எவ்வாறு உதவுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வைபவத்தினைத் தொடர்ந்து, அமெரிக்க மத்தியநிலையத்தில் இலங்கை இளைஞர்களுடன் உரையாடிய LCDR கத்ரிஆரச்சி, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், கல்வி வாய்ப்புகளைத் தேடுவதற்கும், தங்களது திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும், நாட்டின் எதிர்காலத்திற்குப் பங்களிப்புச் செய்வதற்கும் அவர்களை ஊக்குவித்தார். அமெரிக்காவில் தான் கல்வி கற்றது பற்றி அவர் குறிப்பிடுகையில், “அமெரிக்காவில் நான் செலவிட்ட காலப்பகுதியானது, எமது கடற்படை எதிர்கௌ்ளும் உண்மையான சவால்களைச்
சமாளிப்பதற்கான புதிய கருவிகளை எனக்கு வழங்கியது.
இலங்கைக்குச் சேவையாற்றுவதற்காக அந்த அறிவைப் பயன்படுத்துவதற்கு ஆவலாக இருப்பதுடன், எனது இவ்வனுபவம், எமது நாட்டிற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளைப் பின்தொடர்வதற்கு ஏனைய இளம் இலங்கையர்களை ஊக்குவிக்குமெனவும் நான் எதிர்பார்க்கிறேன்.” எனக் கூறினார். 2013 ஆம் ஆண்டில், இலங்கைக் கடற்படை வரலாற்றிலேயே, கௌரவமிக்க ‘Sword of Honour’ எனும் விருதினைப்பெற்ற முதலாவது பெண் ‘மிட்ஷிப்மன்’ (midshipman) எனும் பெருமையைப் பெற்ற, ஹொரன நகரிலுள்ள தக்ஷிலா மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவியான LCDR கத்ரிஆரச்சி, தடைகளை உடைக்கும் ஒரு வரலாற்றினைக் கொண்டவராவார்.

































