Sep 27, 2026 - 07:36 AM

முதல் காலாண்டில் ரூ. 55,900 கோடி (595 கோடி டொலர்) அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்து இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இந்திய மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட புள்ளி விவரங்கள் இதைத் தெரிவிக்கின்றன.
நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்த முதல் 10 மாநிலங்களின் புள்ளிவிவரங்களை இந்திய மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ரூ.39,800 கோடி (422 கோடி டொலர்) பெற்று 2-ஆம் இடத்திலும், டெல்லி ரூ.25,203 கோடி (267 கோடி டொலர்) பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளன.
துறைவாரியாக நாட்டில் சேவைத் துறை அதிகபட்சமாக 704 கோடி டொலர் முதலீட்டைப் பெற்று முதலிடத்திலும், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை 284 கோடி டொலர் முதலீட்டைப் பெற்று 2-ஆம் இடத்திலும், வா்த்தகத் துறை 192 கோடி டொலர் முதலீட்டைப் பெற்று 3-ஆம் இடத்திலும், மரபுசாரா எரிசக்தி துறை 124 கோடி டொலரை பெற்று 4-ஆம் இடத்திலும் உள்ளன.
இந்த கால கட்டத்தில் 571 கோடி டொலர் ஜப்பானில் இருந்து முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. அதிக முதலீடுகள் வந்த நாடுகள் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக சிங்கப்பூரிலிருந்து 522 கோடி டொலரும், மோரீஷஸிலிருந்து 231 கோடி டொலரும், அமெரிக்காவிலிருந்து 134 கோடி டொலரும் இந்தியாவில் முதலீடு வரப்பெற்றுள்ளன. மொத்த அந்நிய முதலீடு நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் 3,065 கோடி டொலராக உயா்ந்துள்ளது.
அந்நிய நேரடி முதலீடு 2026-2027 (ஏப்ரல் - ஜூன்)
தமிழ்நாடு - ரூ. 55,900 கோடி
மகாராஷ்டிரம் - ரூ. 39,800 கோடி
டெல்லி - ரூ. 25,203 கோடி
கா்நாடகம் - ரூ. 19,857 கோடி
ஹரியாணா - ரூ. 12,776 கோடி
தெலங்கானா - ரூ. 12,506 கோடி
குஜராத் - ரூ. 12,287 கோடி
உத்தர பிரதேசம் - ரூ. 538 கோடி
ராஜஸ்தான் - ரூ.99 கோடி
ஜாா்க்கண்ட் - ரூ.1 கோடி































