Sep 23, 2026 - 02:21 PM

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
க்வாமாகுதா (KwaMakhutha) பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய நபர்கள், அங்கிருந்த 14 பேர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நால்வரில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பில் பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்தவர்கள் ஆவர். ஆனால், "தற்போது தொடங்கப்பட்டுள்ள விசாரணையைப் பாதுகாக்கும் பொருட்டு" அதுகுறித்த மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், "எதிரெதிர் குழுக்களுக்கு இடையே நிலவும் மோதலாக" இது இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.































