Sep 17, 2026 - 06:13 PM

கல்வியின் ஊடாக எதிர்கால தலைமுறையினரை வலுப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், செலான் வங்கி அண்மையில் ரண்பொகுணுகம, ரண்பொகுணுகம மகா வித்தியாலயத்தில் தனது 293ஆவது ‘பஹசர’ நூலகத்தை திறந்து வைத்தது. இது நாடெங்கிலும் 300 ‘பஹசர’ நூலகங்களை நிறுவும் வங்கியின் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது.
இந் நூலகம் மேல் மாகாண பிரதிப் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் அஜித் விஜேசுந்தர, செலான் வங்கியின் மேற்கு பிராந்திய, பகுதி முகாமையாளர் சமில விதான, ரண்பொகுணுகம மகா வித்தியாலய அதிபர் B.S.S. பிரேமரத்ன, அதன் பிரதி அதிபர் S.A.P.P. சுபாசிங்க, செலான் வங்கியின் வர்த்தகநாம சந்தைப்படுத்தல் முகாமையாளர் G. விசாகன், செலான் வங்கியின் ரண்பொகுணுகம கிளை முகாமையாளர் தரிந்து சில்வா, பெற்றோர் மற்றும் அப்பிரதேசத்தை சார்ந்தோரின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இம் முயற்சியின் ஒரு பகுதியாக, பாடசாலையின் நூலக வசதிகளை மேம்படுத்துவதுடன், மாணவர்களுக்கு அறிவையும் நவீன கற்றல் வளங்களையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில், செலான் வங்கி இரண்டு மடிக்கணினிகள், திரையுடன் கூடிய பல்லூடக வீழ்த்தி மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கியது.
இந் நூலகத் திறப்பு விழா, மாணவர்களிடையே கற்றல், படைப்பாற்றல், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பஹசர வாரம்’ எனும் ஒரு வாரகால நிகழ்ச்சித் தொடரின் நிறைவாக இடம்பெற்றது. இந்நிகழ்ச்சித் தொடரில் தரம் 10 மாணவர்களுக்கு சிறந்த நிதியியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் சிறு வயதிலிருந்தே பொறுப்பான நிதிப் பழக்கங்களை வளர்த்துக்கொள்வதற்கும் தேவையான அடிப்படை அறிவை வழங்கும் நிதியியல் அறிவூட்டல் நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது. அத்துடன், மாணவர்களின் கல்விப் பயணத்தில் முக்கிய கட்டமாக விளங்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்தரங்கொன்றும் நடத்தப்பட்டது.
இளம் மாணவர்களின் இலக்கிய வெளிப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களால் எழுதப்பட்ட கவிதைகள், புதுக்கவிதைகள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கிய மாணவர் வெளியீடொன்றும் இந்நிகழ்ச்சித் தொடரின் போது வெளியிடப்பட்டது. செலான் வங்கி, இதில் சிறந்த 30 படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சமர்ப்பித்த மாணவர்களின் படைப்பாற்றலையும் திறமையையும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தது.
‘பஹசர வாரத்தின்’ ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட 16 வயதுக்குட்பட்டோருக்கான கரப்பந்தாட்டப் போட்டியில், ரண்பொகுணுகம மகா வித்தியாலயம், வெயங்கொடை புனித மரியாள் கல்லூரி மற்றும் வெயங்கொடை ஜனாதிபதி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் அணிகள் பங்கேற்றன. இப்போட்டி, குழுச் செயற்பாடு, விளையாட்டு ஒழுக்கம் மற்றும் அண்மித்த பாடசாலைகளுக்கு இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக அமைந்தது. இதில் வெயங்கொடை ஜனாதிபதி வித்தியாலயம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டதுடன், பங்கேற்ற அனைத்து அணியினருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த முயற்சி குறித்து செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன கூறுகையில், “வாழ்க்கையை மாற்றியமைத்து, புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் கல்வி மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும். ‘பஹசர’ திட்டத்தின் ஊடாக, அறிவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை வலுப்படுத்துதல், நிதியியல் அறிவை வளர்த்தல் மற்றும் மாணவர்கள் வெற்றிபெறத் தேவையான வளங்களை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் செலான் வங்கி இலங்கையின் எதிர்காலத்தில் தொடர்ந்தும் முதலீடு செய்து வருகிறது. எமது 293ஆவது ‘பஹசர’ நூலகத் திறப்பானது, நாடு முழுவதும் 300 நூலகங்களை நிறுவுவதற்கான எமது தொலைநோக்குப் பார்வையை நோக்கிய மற்றுமொரு முக்கிய படியாகும். அத்துடன், சமூகங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான எமது முயற்சிகளையும் இது மேலும் வலுப்படுத்துகிறது.” என்றார்.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, கல்வி, இளைஞர் வலுவூட்டல் மற்றும் நிதியியல் அறிவூட்டல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களின் ஊடாக அர்த்தமுள்ளதும் நிலையானதுமான சமூக மேம்பாட்டை முன்னெடுப்பதில் செலான் வங்கி தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. வங்கியின் முக்கிய சமூக நிலைபேறான முன்னெடுப்புகளில் ஒன்றான ‘பஹசர’ திட்டம், பாடசாலை நூலக உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல், அத்தியாவசிய கற்றல் வளங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இலங்கை முழுவதிலுமுள்ள மாணவர்கள் தமது முழுத் திறனையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.





























