Sep 17, 2026 - 05:37 PM

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் பாயும் நோர்வூட், ஷோர்ட்ரி தோட்டத்தில் உள்ள கால்வாயை மறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடமொன்றை, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் முற்றுகையிட்டுள்ளனர்.
முற்றுகை நடவடிக்கையின் போது அங்கு இருந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 நீர் பம்பிகள் மற்றும் மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் ஹட்டன் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி முழுமையாக மூடிமுடக்கப்பட்ட இந்த நிலத்தில், கடத்தல்காரர்கள் சுமார் 100 பேரை ஈடுபடுத்தி மீண்டும் இரவும் பகலும் இந்த சட்டவிரோத நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.
கால்வாயை மறித்து பெரிய குழிகளைத் தோண்டி முன்னெடுக்கப்பட்ட இந்த மோசடி காரணமாக அப்பகுதியின் சூழியல் அமைப்பிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முற்றுகையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள், கால்வாயை மறித்து அமைக்கப்பட்டிருந்த குழிகளை உடைத்தெறிவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





























