Sep 17, 2026 - 10:55 AM

துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ் ஆகிய பகுதிகளிலுள்ள இலங்கை தூதரகத்தால், 2026 செப்டம்பர் 2 ஆம் திகதி, துபாய் ஹில்டன் அல் ஹப்தூர் சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Sri Lanka Beyond Your Dreams எனும் முக்கிய இராஜதந்திர மற்றும் முதலீட்டு நிகழ்வின் இரண்டாவது பதிப்பில், கொழும்பு துறைமுக நகரம் பிளாட்டினம் அனுசரணையாளராகப் பங்கேற்றது. இந்நிகழ்வில், ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட சிரேஷ்ட வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் நிறுவனப் பங்குதாரர்கள், இலங்கையின் மிகச் சிரேஷ்ட அரசாங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் மேதகு கலாநிதி தானி பின் அகமத் அல் செய்யூதி கெளரவ விருந்தினராகவும், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவின் பங்கேற்பு, இந்நிகழ்வை மேலும் சிறப்புறச் செய்ததுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான பொருளாதார இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியது. இப் பிரதிநிதிகள் குழுவில் பிரதமரின் செயலாளர் திரு. ஜி. பிரதீப் சபுதந்திரி, இலங்கை முதலீட்டுச் சபையின் தவிசாளர் திரு. துமிந்த ஹுலங்கமுவ, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தவிசாளர் திரு. மங்கள விஜேசிங்க மற்றும் வர்த்தகப் பணிப்பாளர் நாயகம் திரு. சோமசேன மஹதியுல்வெல ஆகியோர் அடங்கியிருந்தனர்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கான இலங்கையின் தூதுவர் பேராசிரியர். அருஷ கூரே, இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான இருதரப்புப் பொருளாதார உறவை மேலும் ஆழப்படுத்துவதற்கான ஒரு தளமாக இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதுடன், பிரம்மாண்டமான மற்றும் மதிப்புமிக்க ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடாத்தியதற்காக துபாயிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அயராத முயற்சிகளை பாராட்டியிருந்தார்.
நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஹேரத் தமது பிரதான உரையில், இலங்கைக்கும் அரபு பிராந்தியத்திற்கும் இடையிலான நூற்றாண்டுகள் பழமையான உறவை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், ஒரு முக்கிய பொருளாதாரப் பங்காளியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வகிக்கும் இன்றியமையாத பங்கையும் சுட்டிக்காட்டினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான விரிவான பொருளாதாரக் பங்காண்மை ஒப்பந்தத்தை இறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இது வர்த்தகம், முதலீடு மற்றும் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு வலுவான கட்டமைப்பை நிறுவும் எனக் குறிப்பிட்ட அவர், வளைகுடா முதலீடுகளுக்கு ஒரு நம்பகமான பங்காளியாக இலங்கை முழுமையாகத் தயாராக உள்ளது என்பதையும் உறுதிப்படுத்தினார்.
வலுப்பெற்று வரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இலங்கை பங்காண்மையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியமான வாய்ப்பாக கொழும்பை துறைமுக நகரத்தைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹேரத், மேலும் குறிப்பிடுகையில், “ஒரு பிரத்தியேக சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் போட்டித்தன்மை மிக்க சலுகைகளைக் கொண்ட சிறப்புப் பொருளாதார வலயமாக (SEZ), இலங்கையின் பொருளாதார இலக்கு கொழும்பு துறைமுக நகரின் மூலம் நடைமுறை உலகிற்குச் சாத்தியமாகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வர்த்தகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு, வளைகுடா பிராந்தியத்தின் வாய்ப்புகளுடனும் பலங்களுடனும் உங்களை இணைத்தவாறே, தெற்காசியாவின் வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கான ஒரு நவீன, சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்ட தளத்தையும் இயல்பான ஒரு நுழைவாயிலையும் கொழும்பு துறைமுக நகரம் வழங்குகிறது.” என்றார்.
கௌரவ விருந்தினராக உரையாற்றிய மேதகு கலாநிதி தானி பின் அகமத் அல் செய்யூதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலீட்டாளர்களுக்கு இலங்கை வழங்கும் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். “வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் நீண்டகால, உயர்-செல்வாக்குமிக்க திட்டங்களைத் தொடர்ந்து தேடி வரும் எமது முதலீட்டுச் சமூகத்திற்கு இலங்கை கணிசமான வாய்ப்புகளை வழங்குகிறது. உடனடி மறுசீரமைப்புத் தேவைகள் முதல் அதன் சரக்குகள், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் அபாரமான ஆற்றல் வரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூலதனத்திற்கு மிகவும் ஈர்ப்புடைய தலங்களில் ஒன்றாக இலங்கை திகழ்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
பிளாட்டினம் அனுசரணையாளராக கொழும்பு துறைமுக நகரின் பங்கேற்பானது, வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) பிராந்தியத்திற்கான இலங்கையின் முதன்மையான முதலீட்டு முன்மொழிவுகளில் ஒன்றாக அதன் பங்கு திகழ்வதைப் பிரதிபலித்தது. கொழும்பு துறைமுக நகரின் பொருளாதார ஆணைக்குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி திரு. ஹர்ஷ அமரசேகர, இச் சிறப்புப் பொருளாதார வலயத்திற்கு (SEZ) அடிப்படையாக அமைந்துள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் முதலீட்டு முன்மொழிவு குறித்து வருகை தந்திருந்தவர்களிடையே உரைநிகழ்த்தினார். கொழும்பு துறைமுக நகரம் என்பது வெறும் ஒரு அபிவிருத்தித் திட்டம் மட்டுமல்ல. இது சர்வதேச முதலீடுகளுக்கான இலங்கையின் நுழைவாயிலும், வளைகுடா பிராந்தியத்திற்கும் தெற்காசியாவிற்கும் இடையிலான ஒரு மூலோபாய பாலமும் ஆகும், என்று அவர் கூறினார். வளைகுடா முதலீட்டாளர்கள் பன்முகப்படுத்தப்பட்ட, மீள்தன்மை கொண்ட மற்றும் உலகளாவிய ரீதியில் இணைக்கப்பட்ட வளர்ச்சித் தளங்களை அதிகளவில் தேடி வரும் இக்காலக்கட்டத்தில், கொழும்பு துறைமுக நகரம் ஒரு ஈர்க்கக்கூடிய முன்மொழிவை வழங்குகிறது: சர்வதேச தரத்திலான ஒழுங்குமுறை கட்டமைப்பு, நம்பிக்கையான மற்றும் நடுநிலையான வணிகச் சூழல் மற்றும் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் ஒன்றிற்கு நேரடியாகச் சென்றடையும் வசதி ஆகியவற்றைக் கொண்ட ஒரு நவீன சிறப்புப் பொருளாதார வலயமாக இது திகழ்கிறது. மேலும், வளைகுடா வணிகங்களுக்கு கொழும்பு துறைமுக நகரானது, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவிற்கு இடையே மூலதனம், தொழில்முனைவு, திறமைகள் மற்றும் விநியோகங்கள் தடையின்றிப் பாய்வதற்கு வழிவகுக்கும் வகையில், அவர்களின் பிராந்திய செயல்பாடுகளின் ஒரு நிரப்பு விரிவாக்கமாகச் செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
CHEC Port City Colombo (Pvt) Ltd இன் பிரதி நிர்வாகப் பணிப்பாளர் திரு. துல்சி அலுவிஹாரே, இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தார். இதுவரை 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதுடன், வரவிருக்கும் ஆண்டுகளில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டும் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். அத்துடன், ரியல் எஸ்டேட் அபிவிருத்தி, நிதிச் சேவைகள், பிராந்தியத் தலைமையகங்கள் மற்றும் வணிகத் தொடர்ச்சிச் செயல்பாடுகள் உள்ளிட்ட துறைகளில் தெற்காசியாவில் முதலீடு செய்ய, தங்களை நிறுவிக் கொள்ள அல்லது தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனங்களுக்கு இச் சிறப்புப் பொருளாதார வலயத்தில் (SEZ) உள்ள வாய்ப்புகளையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
நிறைவுரையாற்றிய துபாயிலும் வடக்கு எமிரேட்ஸிலும் உள்ள இலங்கைத் தூதரகத்தின் இராஜதந்திரி மேதகு அலெக்ஸி குணசேகர, இலங்கையின் தற்போதைய மாற்றங்கள் குறித்துப் பேசுகையில்: வணிகம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒரு மூலோபாயப் பங்காளியாக உங்களை வரவேற்பதற்கு இலங்கை தயாராக உள்ளது. முதலீடு செய்யவும், ஒத்துழைப்புடன் செயல்படவும், உங்கள் கனவுகளுக்கு அப்பால் இலங்கைக்கு ஒரு மாற்றத்தக்க எதிர்காலத்தை வடிவமைப்பதில் தீவிரமாகப் பங்கேற்கவும் உங்களை அழைக்கிறோம், என்று கூறினார்.
இந்நிகழ்வில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, CHEC Port City Colombo (Pvt) Ltd மற்றும் Umm Al Quwain சுதந்திர வர்த்தக வலய அதிகாரசபை ஆகியவற்றுக்கு இடையே முதலீட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது. இது இவ்விரு சிறப்புப் பொருளாதார வலயங்களுக்கும் இடையிலான புதிய நிறுவனப் பங்காண்மையை முறைப்படுத்தியது. Umm Al Quwain சுதந்திர வர்த்தக வலைய அதிகாரசபையின் சார்பில் அதன் பொது முகாமையாளர் திரு. ஜோன்சன் மோடயில் ஜோர்ஜ் அவர்களும், கொழும்பு துறைமுக நகரின் சார்பில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. ரேவன் விக்கிரமசூரிய மற்றும் CHEC Port City Colombo (Pvt) Ltd இன் பிரதி நிர்வாகப் பணிப்பாளர் திரு. துல்சி அலுவிஹாரே ஆகியோரும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கொழும்பு துறைமுக நகரத்திற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தாராள வர்த்தக வலைய அதிகாரசபை ஒன்றுக்கும் இடையிலான இத்தகைய முதலாவது உத்தியோகபூர்வ கூட்டாண்மையானது, ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட வணிகங்களுக்கு தெற்காசியாவின் மிகச்சிறந்த சர்வதேச வணிகத் தளத்திற்குள் நுழைவதற்கான நேரடி மற்றும் நிறுவன ரீதியிலான ஆதரவுடனான பாதையை உருவாக்குகிறது. அத்துடன், கொழும்பு துறைமுக நகரில் பதிவுசெய்யப்பட்ட வணிகங்களின் விரிவடைந்து வரும் சமூகத்திற்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நன்கு கட்டமைக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலைய சூழலமைப்பிற்குள் பிரவேசிப்பதற்கான முறையான வாய்ப்பையும் இது வழங்குகின்றது.
சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மூலோபாய முதலீடு ஆகியவற்றில் இலங்கையின் துடிப்பான வாய்ப்புகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு முதன்மையான தளமாக, Sri Lanka Beyond Your Dreams நிகழ்வின் இரண்டாவது பதிப்பு துபாயிலும் வடக்கு எமிரேட்ஸிலும் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வானது வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் துறைசார் முன்னோடிகள் ஒன்றிணைவதற்கும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்குமான ஒரு விறுவிறுப்பான மன்றமாகச் செயல்பட்டதுடன், இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான எல்லை கடந்த ஒத்துழைப்பு மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தையும் அமைத்தது.





























