Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு - ஜனாதிபதி

Sep 17, 2026 - 08:25 AM

3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
Mobitel Inner 1278

நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதற்காக 3 முக்கியப் பிரிவுகளின் கீழ் நாட்டின் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நவீன இருதய சிகிச்சைத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை நேற்று (16) ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இலவச சுகாதாரத் துறையை மேலும் மக்களிடம் நெருக்கமாக்குதல், உலகின் அதிநவீன உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான முகாமைத்துவ முறைமையை ஸ்தாபித்தல் என்பவையே அந்த முக்கியப் பிரிவுகள் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

குறிப்பிடத்தக்க காலப்பகுதிக்குப் பின்னர் நாட்டின் சுகாதார சேவையைப் பலமாகப் பேணிச் செல்வதற்குத் தேவையான மனிதவளம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் (JICA) கடன் உதவியின் கீழ் 3,545 மில்லியன் ரூபாய் செலவில் 8 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் இந்த இருதய சிகிச்சை தொகுதியின் மூலம், அதிநவீன இருதய நோய் மற்றும் இருதய - மார்பு நாடி சத்திரசிகிச்சை வசதிகளைப் பிரதேச மக்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகவுள்ளது. 

மேலும், இத்தொகுதியானது அதிநவீன இருதய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (Coronary Care & ICU), கெதீட்டர் பரிசோதனைக் கூடங்கள் (Catheterization Labs), எக்ஸ்ரே (X-Ray), ஈ.சி.ஜி (ECG) வசதிகள், விசேட சிகிச்சை நிலையங்கள், வாட்டுக் தொகுதிகள், ஆய்வுக்கூடங்கள், கேட்போர் கூட வசதிகள் மற்றும் நூலகம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது. 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 

அநுராதபுரம் வைத்தியசாலையை மேம்படுத்துவதற்காக சுமார் 19,000 மில்லியன் ரூபாய் செலவிலான திட்டங்களை 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் சேர்த்து அநுராதபுரம் வைத்தியசாலையின் மேம்பாட்டுக்காக சுமார் 34,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பாரிய முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 

கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாத காரணத்தினால் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நவீன இருதய சிகிச்சை தொகுதியின் நிர்மாணப் பணிகளை 18 மாதங்களுக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். 

இன்று நாங்கள் மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளின் அத்தியாவசியமான சில நிர்மாணப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம். 

எங்கள் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்திருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். 

ஒரு பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது அது பொருளாதார மட்டத்தில் மாத்திரம் இருப்பதில்லை. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பாரியளவில் அதிகரிக்கும் போதும், அல்லது எமது வெளிநாட்டு நாணயச் சேமிப்பு பாரியளவில் வீழ்ச்சியடையும் போதும், எமது அரச வருமானம் பாரியளவில் சரியும் போதும் அதன் இறுதி விளைவு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். 

எனவே, நாடென்ற வகையில் நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அவல நிலையின் அனுபவங்களை எதிர்கொண்டிருந்தோம் என்று நான் நினைக்கிறேன். 

அது மக்களுக்கு பாரிய துயரத்தைக் கொண்டு வந்தது. எங்கள் நாட்டின் பொருளாதாரம் எங்கு சென்று முடியப்போகிறது என்று உறுதியாகக் கூற முடியாத அளவுக்குப் பிரச்சினைகள் எழுந்தன. 

அந்த சமயத்தில் ஒரு பொருளாதார நிபுணர் என்னிடம், "எங்கள் பொருளாதாரம் மலையிலிருந்து கீழே சரிந்து கொண்டிருக்கிறது, அது எங்கு நிற்கும் என்று கூற முடியாதளவுக்கு பேரழிவு" என்று கூறினார். 

அந்த நெருக்கடியால் "வாகனத்தில் செல்பவர்கள் துவிச்சக்கர வண்டி ஓட்டுகிறார். தொலைதூரப் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகள் கிராமப் பாடசாலைகளுக்கு செல்கின்றனர்" என்று அவர் கூறினார். அந்தளவுக்கு நிச்சயமற்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டோம். 

அந்தப் பொருளாதார நெருக்கடி பாரிய சமூகத் துயரத்தை உருவாக்கியது. ஒரு பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த அரசியல் மாற்றத்தின் விளைவாகத்தான் தற்போதைய அரசாங்கம் உருவாகிறது. 

இந்த வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த பொருளாதாரத்தை எவ்வாறு ஸ்திரப்படுத்துவது என்பதுதான் எமக்கு முன்னால் இருந்த பிரதான சவாலானது. தற்போது நாட்டின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு புள்ளிவிவரத்திலும் மிக முக்கியமான பல ஸ்திரத்தன்மைகள் பதிவாகியுள்ளன. இன்று ஒரு நாடாக எங்களிடம் பலமான பொருளாதாரம் உள்ளது என்று எங்களால் கூற முடியும். 

உலக வங்கி அண்மையில் எங்களை உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாகப் பெயரிட்டதை நான் பார்த்தேன். அவை எங்களுக்கு சாதகமான புள்ளிவிவரங்களாக இருக்கலாம். இருப்பினும், மக்கள் அடைந்துகொள்ளும் அந்த வெற்றிகள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுத்துள்ளதா இல்லையா என்பதே மக்களின் தேவையாகும். 

ஆனால் பொருளாதாரம் நல்லதா கெட்டதா என்பதைத் தங்களது வாழ்க்கைத் தரம் எந்தளவுக்கு எளிதாகியுள்ளது என்பதன் அடிப்படையிலேயே மக்கள் அளவிடுகிறார்கள். எனவே, நாம் இப்போது அடைந்துள்ள பொருளாதார வெற்றிகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கே நாம் கவனம் செலுத்தியுள்ளோம். 

அடுத்த மிக முக்கியமான விடயமாகக் கல்வி குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் பெரும் முயற்சி எடுத்து வருகிறோம். அதில் சில முரண்பாடுகள் உள்ளதை நாங்கள் அறிவோம். 

உலகில் எப்போதுமே மக்களைப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிப்பது சற்று கடினமானது. பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க முற்படும்போது முரண்பாடு ஏற்படுகிறது. 

இருப்பினும், நாங்கள் அதே பழக்கவழக்கங்களிலேயே தொடர்ந்து இருந்தால் மனித சமூகம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது. அந்தந்தக் காலப்பகுதியில் தோன்றிய அரசியல் அதிகாரங்கள், தலைமைத்துவங்கள், பழங்குடி தலைவர்களாக இருக்கலாம், அந்த பழங்குடி சமுகங்களிலிருந்து அந்தப் பழக்கவழக்கங்களை விடுவித்ததன் காரணமாகத்தான் இந்த மனித சமூகம் ஒரு வளர்ந்த சமூகமாக உருவானது. 

எனவே, எங்களில் சிலர் அந்தப் பழைய பிற்போக்கான, அதாவது பழைய நிலைக்குள், இந்தச் சமூகத்தை முடக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் நாங்கள் முற்போக்கான, எதிர்கால நோக்குடைய அரசியல் இயக்கமாகும். எனவே, அந்த முரண்பாடுகளை எதிர்கொண்டு நாங்கள் முழுமையாக இந்தக்கல்வித் துறையில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம். இல்லாவிட்டால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. 

அடுத்த மிக முக்கியமான விடயம் ஆரோக்கியமான வாழ்க்கை. எங்களுக்கு என்ன கிடைத்தாலும் பிரயோசனமில்லை, எங்களுக்கு ஒரு நோய் நொடியுடன் கூடிய வாழ்க்கை அமைந்திருந்தால், எங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டால் சிறந்த மருத்துவ சேவை இல்லையெனில் ஏனைய செல்வங்களால் எங்களுக்கு எந்தப் பயனுமில்லை. எனவே, எமது மிக முக்கியமான செல்வம் சிறந்த, ஆரோக்கியமான வாழ்க்கைதான். 

எனவே, இந்த ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதற்காகவும், அதற்கான சேவைகளை விரிவுபடுத்துவதற்காகவும் எமது அரசாங்கம் பாரிய கவனம் செலுத்தியுள்ளதுடன், இதற்காக மூன்று துறைகள் மீது நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். 

இலவச சுகாதார சேவையை மேலும் மக்களுக்கு நெருக்கமாக்குவது அதில் ஒன்றாகும். இப்போதும் எங்களிடம் கிராமப்புற வைத்தியசாலைக் கட்டமைப்பொன்று உள்ளது. 

இருப்பினும், இந்தச் சேவையை கிராம மக்களுக்கு மேலும் நெருக்கமாக்க முடியுமா? அதற்காகத்தான் நாங்கள் "ஆரோக்கியா" வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். 

குறிப்பாக, உலகில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, கடந்த காலங்களில் உலகளாவிய சுகாதார சேவை மிகப் பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. எனவே, நாம் பழமையான உபகரணங்கள், பழைய தொழில்நுட்பம் மற்றும் பழைய மருத்துவ முறைகளுடன் தொடர முடியாது. 

உலகில் உருவாகியுள்ள நவீன மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை நமது நாட்டிற்கு கொண்டு வர வேண்டும். எனவே, மேம்படுத்தப்பட்ட மிக நவீன சுகாதார சேவையை உருவாக்குவது நமது இரண்டாவது எதிர்பார்ப்பாகும். மிகவும் சிறந்த முகாமைத்துவ முறையொன்றை உருவாக்குவதே மூன்றாவது எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278