Oct 4, 2026 - 12:04 PM

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து பங்குபற்றும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (04) அறிவித்துள்ளது.
குசல் மெண்டிஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் பல மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இரண்டு வருடங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் தசுன் ஷானக்க மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ள அதேவேளை, ஒரு வருடத்திற்கும் மேலாக வாய்ப்பு கிடைக்காத ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவிற்கும் இம்முறை மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்துள்ள ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்கவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், மருத்துவப் பரிசோதனைகள் மூலம் அவரது முழுமையான உடற்தகுதி உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர் இத்தொடரில் பங்கேற்பார் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, நிறைவடைந்த இங்கிலாந்துத் தொடரில் சோபிக்கத் தவறிய சரித் அசலங்க இந்த அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் பாகிஸ்தான் விஜயம் முதற்கட்டமாக 3 போட்டிகள் கொண்ட இருபது20 (T20) தொடருடன் ஆரம்பமாகவுள்ளதுடன், அப்போட்டிகள் ஒக்டோபர் 09, 11 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இருபது20 தொடர் நிறைவடைந்த பின்னர், ஒக்டோபர் 18 ஆம் திகதி இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது போட்டியுடன் முக்கோண ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், அது ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஒருநாள் முக்கோணத் தொடர் நிறைவடைந்த பின்னர், ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கீழ் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.
இலங்கை குழாம்:
பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, கமில் மிஷார, குசல் மெண்டிஸ் (தலைவர்), பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிக்கே, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷண, சசிந்து கொழும்பகே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, எஷான் மாலிங்க.































