Oct 4, 2026 - 08:52 AM

கொஸ்கொட, மஹஇந்துருவ பகுதியில் 4 பேரைக் கொலை செய்வதற்குத் தயாராகியிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நேற்று (03) இரவு 4 பேரைக் கொலை செய்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த சந்தேகநபர்கள் சிலர் கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகாடேகொட பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில், அவ்வதிகாரிகள் அடங்கிய குழுவினர் குறித்த வீட்டை முற்றுகையிட நடவடிக்கை எடுத்தனர்.
அம்முற்றுகையை மேற்கொண்ட போது பொலிஸ் அதிகாரிகளைக் கண்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதன்போது பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அத்துடன் அங்கிருந்த மற்றொரு சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், இன்னொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்வீட்டை பொலிஸார் பரிசோதித்த போது, அங்கிருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில் 9 மில்லி மீட்டர் ரக பிஸ்டல் துப்பாக்கி, 8 தோட்டாக்கள் அடங்கிய அதன் மெகசின் (Magazine), ரிவோல்வர் ரக துப்பாக்கி மற்றும் அதன் 6 தோட்டாக்கள், 9 மில்லிமீட்டர் ரக மெகசின் மற்றும் 6 தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பன அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குற்றச்செயலைப் புரியச் செல்வதற்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாரின் பதில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 32 மற்றும் 33 வயதுடைய மஹஇந்துருவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் கொஸ்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கொஸ்கொட பொலிஸாரும் வலான ஊழல் தடுப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
'லொகு பெட்டி' (Loku Patty) தரப்பைச் சேர்ந்த துப்பாக்கிதாரிகள் சிலர், 'கரந்தெனிய சுத்த' (Karandeniya Sudda) தரப்பைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து இத்துப்பாக்கிச் சூட்டை நடத்த முயன்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 'லொகு பெட்டி' என்ற குற்றவாளியின் சகோதரரான 'பொடி பெட்டி' என்பவர் கடந்த 01 ஆம் திகதி அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.
கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரி நடந்து வந்து 'பொடி பெட்டி' மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு மீண்டும் நடந்தே தப்பிச் சென்றிருந்தார்.
அதற்கமைய, அப்படுகொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் 'லொகு பெட்டி' தரப்பினரால் இக்கொலைத் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.































