Oct 2, 2026 - 07:28 PM

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் நெருக்கடிகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வுகளை வழங்கத் தவறினால், 2025ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் குழுவைப் பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கோ அல்லது அவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கோ இயலாது என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் நிலவும் கடுமையான விரிவுரையாளர் பற்றாக்குறையே இந்த நெருக்கடிக்கு முதன்மையான காரணம் என அந்தச் சம்மேளனத்தின் செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், அழகியல் கற்கைகள் பல்கலைக்கழகத்தின் பீடமொன்றில், 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான முதலாம் வாரக் கல்வி நடவடிக்கைகள் கடந்த வாரமே ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில், 2025ஆம் ஆண்டு மாணவர் குழுவை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இணைத்துக்கொள்வது எவ்விதத்திலும் சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டார்.
வழமையாக நான்கு மாணவர் குழுக்கள் (Batches) மாத்திரமே இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்களில், தற்போதைய சூழலில் 5 அல்லது 6 மாணவர் குழுக்கள் தங்கிப் பயின்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உயர்தரப் பரீட்சை முடிந்த பின்னர் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்காக மாணவர்கள் 2 அல்லது 3 ஆண்டுகள் வீடுகளில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுவதாகவும், தற்போதைய நெருக்கடியால் இந்தக் காத்திருப்பு காலம் 4 ஆண்டுகள் வரை நீடிக்கும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் (UGC) அரசாங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பல்கலைக்கழகங்களில் தற்போது நிலவும் உண்மையான இடநெருக்கடியையும் திறன்களையும் உணராமல் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
கடந்த காலங்களில் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாதளவு அதிக பணிச்சுமைக்கு மத்தியிலும் விரிவுரையாளர்கள் மேலதிக மாணவர் குழுக்களைப் பராமரித்து வந்தபோதிலும், இனிமேலும் இவ்வாறான முறையற்ற சூழலில் பணியாற்றத் தயாராக இல்லை என சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க மேலும் வலியுறுத்தினார்.































