Oct 2, 2026 - 09:30 PM

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த், தனது 75 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தை மையமாக வைத்து சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி வரும் தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து பேருந்தில் பஸ் கண்டக்டராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் இன்று உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.
சிறுவயது நினைவுகள், பெங்களூரில் கழித்த நாட்கள், அங்கிருந்து சென்னை வந்த பயணம், நாடக அனுபவங்கள் மற்றும் சினிமாவில் நுழைந்தது என தனது வாழ்க்கையில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளையும், அனுபவங்களையும் அத்தியாயம் அத்தியாயமாக அவரே நேரில் எழுதி வருகிறார்.
இந்நிலையில், ரஜினிகாந்தின் சுயசரிதை புத்தகம் குறித்து அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திடம் கேட்கப்பட்ட போது, அப்பா தனது 75 ஆண்டுகால வாழ்க்கை கதையை தீவிரமாக புத்தகமாக எழுதி வருகிறார். இந்த சுயசரிதையை நான் பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போன்ற ஒரு மிக முக்கியமான ஆன்மீக மற்றும் வாழ்வியல் படைப்பாகவே பார்க்கிறேன்.
பெங்களூரில் இருந்து சென்னை வந்த காலகட்டத்திலிருந்து நடந்த சம்பவங்களை சாப்டர் பை சாப்டராக அப்பா எழுதி முடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. முதலில் இந்த புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளிவரட்டும்.
அதற்கு பிறகு அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை 'வெப் சீரிஸாக' எடுக்கும் எண்ணம் எனக்கு இருக்கிறது. வெப் சீரிஸில் ரஜினியாக நடிக்க போவது யார்? தொடர்ந்து பேசிய சௌந்தர்யா, புத்தகம் முழுமையாக வெளிவந்த பிறகுதான், வெப் சீரிஸில் அப்பா கதாபாத்திரத்தில் யார் யார் நடிப்பார்கள் என்பது குறித்து பேச முடியும். இப்போதே அது குறித்து எதையும் முடிவு செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.
ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக தொடங்கி, இந்திய சினிமாவின் மாபெரும் ஆளுமையாக உயர்ந்த சூப்பர் ஸ்டாரின் சுயசரிதை புத்தகம் வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர்.































