Oct 2, 2026 - 09:29 PM

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன மற்றும் கடுவலை மாநகர முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (2) முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடுவலை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் குழுவொன்றினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அத்துருகிரிய, மில்லேனியம் சிட்டி (Millennium City) வீட்டுத் திட்டத்துக்குச் சொந்தமான காணியொன்றை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மில்லேனியம் சிட்டி வீட்டுத் திட்டத்துக்குச் சொந்தமான 100 பேர்ச்சஸ் காணியை அத்துருகிரிய மெட்ரோ பஸ் நிலையத்துக்காகப் பயன்படுத்தும் நோக்கில், கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன மற்றும் கடுவலை மாநகர முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரின் தலைமையில் கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி குறித்த அத்துருகிரிய மெட்ரோ பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
எனினும், இந்தக் காணி தமக்குச் சொந்தமானது என்றும், அதனை குறித்த மக்கள் பிரதிநிதிகள் பலவந்தமாகக் கையகப்படுத்தியுள்ளதாகவும் மில்லேனியம் சிட்டி வீடமைப்புத் திட்டத்தின் நிர்வாகம் குற்றம்சாட்டியிருந்ததுடன், அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன மற்றும் கடுவலை மாநகர சபை முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோர் கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.































