Oct 1, 2026 - 10:05 PM

செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 23 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை அறிவித்துள்ளது.
இந்தச் சந்தேகநபர்கள் தடைசெய்யப்பட்ட வலைகள், சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை, வாகரை, மூதூர், உப்பவெளி, கிரீன்பே, கதிரவெளி, பிளாக் ஸ்டாஃப், பவுல் பொயிண்ட், கிண்ணியா, நிலாவெளி, கும்புறுப்பிட்டி, வெருகல், பால்சேனை, புதுமாத்தளன், சாதுகுளம், யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கோவிலன், மன்னார் தாவுல்பாடு மற்றும் சவுத்பார் ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கி, கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய கடற்படைக் கட்டளைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடி படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக வாகரை, கொட்பே, முல்லைத்தீவு, மூதூர், திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலுள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.































