Oct 1, 2026 - 06:45 PM

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற 19 வயதுப் பெண்ணின் கொடூரப் படுகொலைச் சம்பவத்திற்காக 1996 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 50 வயதான கிறிஸ்டா பைக் (Christa Pike) என்பவருக்கே, நெஷ்வில்லில் உள்ள ரிவர்பெண்ட் பாதுகாப்புச் சிறைச்சாலையில் நச்சு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவருக்கு 'பென்டோபார்பிட்டல்' (pentobarbital) எனும் கெமிக்கல் இருமுறை ஊசி மூலம் செலுத்தப்பட்டபோதிலும், அவர் இறக்காமல் சுயநினைவை இழந்து தொடர்ந்து சுவாசித்துக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து, அவரது சட்டத்தரணிகள் அவசர அவசரமாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, தண்டனை நிறைவேற்றத்தை உடனடியாக நிறுத்துமாறும் அவருக்கு அவசர மருத்துவ உதவி வழங்குமாறும் கோரினர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் தண்டனை நிறைவேற்றம் இடைநிறுத்தப்பட்டு, அவர் மேலதிக சிகிச்சைக்காக சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள டென்னசி மாநில ஆளுநர் பில் லீ (Bill Lee), மரண தண்டனை நிறைவேற்றத்தின் போது உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவான சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்வாண்டில் திட்டமிடப்பட்டிருந்த எஞ்சிய மரண தண்டனை நிறைவேற்றங்களையும் அவர் இடைநிறுத்தியுள்ளார்.
1995 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் காதலனுடன் இணைந்து 19 வயதான கொலீன் ஸ்லெம்மர் (Colleen Slemmer) என்பவரைக் கொடூரமாகக் கொலை செய்தமைக்காக கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. டென்னசி மாநிலத்தில் மரண தண்டனை வரிசையில் இருந்த ஒரே பெண் குற்றவாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.































