Oct 1, 2026 - 06:48 PM

பொதுவாக அலுவலகங்களில் ஊழியர்கள் விடுமுறை நாட்களில் பணியாற்றுவது கூடுதல் பணிச்சுமையாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், சண்டிகரைச் சேர்ந்த 25 வயது இளம் தொழிலதிபர் பிரத்தம் ஜிண்டால், விடுமுறை நாளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2 மடங்கு சம்பளம் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் தனது நிறுவனத்தின் பணிச்சூழல் குறித்து பகிர்ந்துள்ள ஜென்சி நிறுவனர் பிரத்தம் ஜிண்டால், வழக்கமான நிறுவன நடைமுறைகளில் இருந்து மாறுபட்ட சில விஷயங்களை பின்பற்றுவதாக கூறியுள்ளார்.
ஊழியர் ஒருவர் தனது விடுமுறை நாளை விட்டுக்கொடுத்து நிறுவன பணிக்காக வந்தால், அவருக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்பதே தனது கொள்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாத இறுதியில் ஊழியர்களுக்காக அதிக செலவில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் கூறியுள்ளார்.
பிரத்தம் ஜிண்டால் தனது சிறுவயதிலேயே வீடியோ எடிட்டிங் துறையில் பயணத்தை தொடங்கி, பின்னர் நிறுவனங்களை உருவாக்கியவர். அவர் 2021 இல் ஒரு அலுவலகத்தையும், 2026 இல் மற்றொன்று என இரண்டு நிறுவனங்களை தொடங்கியுள்ளார்.
கிராபிக்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங்கில் எனக்கு ஒரு தனித்திறமை இருப்பதை நான் சிறு வயதிலேயே உணர்ந்துகொண்டேன். எனது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள, பாடசாலைப் படிப்பிற்குப் பிறகு ஒரு VFX படிப்பை மேற்கொண்டேன்.
யூடியூபர்கள் மீதான எனது மோகம் ஓயவில்லை. நான் சில ஃப்ரீலான்சிங் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, எனது திறமைகளைப் பயன்படுத்தி கிரியேட்டர்களுடனும் பணியாற்ற முடியும் என்பதை உணர்ந்தேன். பின்னர், ஒரு கிரியேட்டருடன் நான் செய்த ஃப்ரீலான்சிங் வேலை, விரைவாக வளர்ந்து பிரேப்பர் மீடியாவாகவும், 50 இற்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு குழுவாகவும் உருவெடுத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
பிரத்தம் ஜிண்டாலின் இந்த வித்தியாசமான அலுவலக நடைமுறைகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.































