Sep 29, 2026 - 06:10 PM

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் SLT-MOBITEL இணைந்து முன்னெடுக்கும் இலங்கை AI வாரம் 2026 நிகழ்வின் பிரதான அங்கங்கள், கொழும்பு Monarch Imperial ஹோட்டலில் இன்று (செப்டம்பர் 29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கை டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கெளரவ பொறியியலாளர் எரங்க வீரரத்ன இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
செப்டம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமான இலங்கை AI வாரம் 2026 நிகழ்வின் முதன்மை அங்கங்களான AI மாநாடு மற்றும் AI கண்காட்சி ஆகியன செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் இடம்பெறுகின்றன. AI இன் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி துறைசார் நிபுணர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை இவை ஒன்றிணைக்கின்றன. இரு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 16 நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட உரையாளர்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளதுடன், AI கண்காட்சியில் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, Huawei, ZTE, Sampath Bank, snowflake, EDOTCO, Connex மற்றும் NCINGA உள்ளிட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களின் தொழினுட்பங்கள் மற்றும் தீர்வுகளினூடாக செயற்கை நுண்ணறிவின் உருமாற்ற ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.
நிகழ்வில் கௌரவ பொறியியலாளர் எரங்க வீரரத்ன கலந்து கொண்டதுடன், ஆரம்ப வைபவத்தில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத், SLT Group தவிசாளர் கலாநிதி மோதிலால் டி சில்வா, SLT-MOBITEL பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத் மற்றும் விசேட விருந்தினர்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
AI கண்காட்சி, கொழும்பு Monarch Imperial ஹோட்டலில் நாளை செப்டம்பர் 30 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பொதுமக்களின் பார்வையிடலுக்காகத் திறந்திருக்கும். இது பார்வையாளர்களுக்குச் செயற்கை நுண்ணறிவை நேரடியாக அனுபவிக்கவும், அதன் நடைமுறைப் பயன்பாடுகளைப் நேரில் கண்டறியவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. பார்வையாளர்களுக்கு AI-வலுவூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை ஆராயவும், வளர்ந்து வரும் புதிய கண்டுபிடிப்புகளுடன் இணையவும், சர்வதேச மற்றும் உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு தொழில்துறைகளிலும் அன்றாட அனுபவங்களிலும் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைக் கண்டறியவும் முடியும்.
இலங்கை AI வாரம் 2026 நாளை தனது இறுதி நாளில் பிரவேசிக்கும் நிலையில், பொது மக்கள் AI கண்காட்சிக்கு விஜயம் செய்து இந்தப் புத்தாக்கங்களை நேரடியாக கண்டு அனுபவிப்பதற்கும், இலங்கையின் AI வலுவூட்டப்பட்ட எதிர்காலத்திற்கு தொழில்னுட்பங்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்கின்றன என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளுமாறும் வரவேற்கப்படுகின்றனர்.































