Sep 28, 2026 - 02:35 PM

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெம்பியன் நகரம் மற்றும் கெம்பியன் தோட்டத்தின் கீழ் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் பிரதான நீர் குழாய் அமைப்பை பல இடங்களில் சேதப்படுத்தி அழித்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெம்பியன் தோட்டத்தின் மேல் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து தேயிலைத் தோட்டம் வழியாக நகரத்திற்கு மேல் அமைந்துள்ள நீர் தாங்கிக்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதான குழாய் அமைப்பே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நீர் அமைப்பு மூலம் கெம்பியன் நகரத்தில் உள்ள கடைகளுக்கும், தோட்டத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
நேற்று (27) இரவு இடம்பெற்ற இந்த நாசகாரச் செயல் தொடர்பில் கெம்பியன் நகர வர்த்தகர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொகவந்தலாவ பொலிஸாரால் அதே தோட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சேதப்படுத்தப்பட்ட நீர் குழாய் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குடிநீர் விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளதால், கெம்பியன் நகர வர்த்தக சமூகத்தினரும், தோட்டத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் சுமார் 225 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களும் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கெம்பியன் நகர வர்த்தகர்கள் தமது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகளும் வர்த்தகர்களும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.































