Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
ஈஸ்டர் தாக்குதல் சதித்திட்டம் முதல் நீதிமன்றத் தீர்ப்பு வரை: முழு விபரம் இதோ!

Sep 22, 2026 - 08:04 PM

ஈஸ்டர் தாக்குதல் சதித்திட்டம் முதல் நீதிமன்றத் தீர்ப்பு வரை:  முழு விபரம் இதோ!
Mobitel Inner 1278

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகக் கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பளித்துள்ளது.

 

269 பேர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடையக் காரணமான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பை அறிவித்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

எனினும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 9 பிரதிவாதிகளை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

 

இலங்கையின் 3 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள 3 முக்கிய நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

 

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 9 தற்கொலை குண்டுதாரிகளால் இந்தத் தொடர் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

இத்தாக்குதல்களில் இலங்கையர்கள் உட்பட 269 பேர் உயிரிழந்ததுடன், சிறுவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

 

விசாரணைகளின் பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

 

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இவ்வழக்கில் 2,309 முறைப்பாட்டாளர்கள் சாட்சியமளித்திருந்தனர்.

 

பல வருடங்களாக இடம்பெற்று வந்த சாட்சி விசாரணைகள் கடந்த ஒகஸ்ட் 24ஆம் திகதி நிறைவடைந்தன.

 

அதற்கமைய, இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

 

இதற்கமைய, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி இன்று காலை முதல் விசேட பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

 

பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் மோப்ப நாய்கள், நடமாடும் சிசிடிவி வாகனங்கள் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன.

 

வழக்கின் பிரதிவாதிகளான நௌஃபர் மௌலவி உள்ளிட்டோர் இன்று காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கத்தோலிக்க திருச்சபையின் குருமார்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

 

இன்று காலை 11.30 மணியளவில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தீர்ப்பு அறிவிக்கப்படத் தொடங்கியது.

 

தீர்ப்பை அறிவித்து உரையாற்றிய தலைமை நீதிபதி நவரத்ன மாரசிங்க, மிகப்பெரிய தீர்ப்பின் மிக முக்கியமான அம்சங்கள் மட்டுமே திறந்த நீதிமன்றத்தில் அறிவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

 

பிரதிவாதிகளுக்கு எதிராக 8,900 பக்கங்களைக் கொண்ட 9 தொகுதிகளைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை, உடந்தையாக இருந்தமை, தீவிரவாதக் கருத்துகள் மற்றும் இனங்களுக்கு இடையே முரண்பாடுகளைப் பரப்பியமை தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததாகப் பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார்.

 

அதன்படி, இத்தாக்குதலுக்கு முன்னர் தீவிரவாத சொற்பொழிவுகள் மற்றும் ஆயுதப் பயிற்சிகளுக்கான பட்டறைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்களைப் பராமரித்தமை தொடர்பாகப் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

 

அப்போது தலைமை நீதிபதி நவரத்ன மாரசிங்க திறந்த நீதிமன்றத்தில் பின்வருமாறு தெரிவித்தார்:

 

"சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே இடத்தில் வரிசையாக நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை. சதித்திட்டம், உடன்பாடு என்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். ஆரம்பத்தில் தொடர்பில் இருந்தவர்கள், இடையில் இணைந்தவர்கள் மற்றும் இறுதியில் இணைந்தவர்கள் அனைவரும் சதித்திட்டத்தின் பங்காளிகளே ஆவர்."

 

தொடர்ந்து, ஒவ்வொரு பிரதிவாதியும் முன்வைத்த தற்காப்பு வாதங்களை நீதிமன்றம் பரிசீலித்ததாக நீதிபதி தெரிவித்தார்.

 

அதில், முதலாவது பிரதிவாதியான மொஹம்மது இப்ராஹிம் மொஹம்மது நௌஃபர் என்ற நௌஃபர் மௌலவி, 2வது பிரதிவாதியான கபூர் மாமா, 3வது பிரதிவாதியான ஹயாத்து மொஹம்மது மில்ஹான், 4வது பிரதிவாதியான மொஹம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, 5வது பிரதிவாதியான மொஹம்மது இப்ராஹிம் சாஹித் அப்துல்லா உள்ளிட்ட 15 பிரதிவாதிகள் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.

 

இருப்பினும், ஏனைய 9 பிரதிவாதிகள் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக மேல்நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார்.

 

அதன்படி, தனது இறுதி முடிவை அறிவித்த மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தின் தலைமை நீதிபதி பின்வருமாறு தெரிவித்தார்:

 

"அனைத்து சாட்சியங்களையும் பரிசீலித்த பின்னர், மூன்று நீதிபதிகளும் ஏகமனதாக இந்த முடிவுக்கு வந்துள்ளோம். அதன்படி, இவ்வழக்கின் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 15, 16, 17 மற்றும் 18 ஆகிய பிரதிவாதிகளுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குழாம் ஏகமனதாகத் தீர்மானிக்கிறது. இருப்பினும், 12, 13, 14, 20, 21, 22, 23, 24 மற்றும் 25 ஆகிய பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறியதால், அவர்களை விடுவிக்கத் தீர்மானிக்கப்படுகிறது."

 

அதன்படி, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கான தண்டனை விபரங்களை கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்றம் தற்போது அறிவித்து வருகின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278