Sep 18, 2026 - 01:00 PM

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்,சிம்ரன், பார்த்தீபன் மற்றும் பலர் நடித்துள்ள "துருவ நட்சத்திரம்" படம் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தும் கடந்த சில வருடங்களாக வெளியாகவில்லை.
இப்படத்தின் நிதி சிக்கல் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கௌதம் மேனன் தரப்பில் படத்திற்கான நிதியாளர் ஒருவர் கிடைத்துள்ளதாகவும், அதனால், படத்தை ஒக்டோபர் 31க்கு முன்பாக வெளியிடுவோம் என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட பார்வையாளர்களும் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்தனர்.
நடிகர் விக்ரமுக்கு தர வேண்டிய 10 கோடி ரூபாய் குறித்த கேள்வியை அவர்கள் எழுப்பினர்.
அது பற்றிய உத்தரவாதத்தை கௌதம் தரப்பு குறிப்பிட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். எந்த வகையில் விக்ரமுக்கான தொகை வழங்கப்பட உள்ளது என்பதைப் பற்றியும் கௌதம் மேனன் பார்வையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கௌதம் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட காரணங்களால் படத்தை ஒக்டோபர் 31, 2026க்குள் வெளியிடுவதற்கான கால நீடிப்பை நீதிபதி வழங்கியுள்ளார்.





























