Sep 18, 2026 - 01:05 PM

இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டு வீடமைப்பதற்கும், தங்கள் குடும்பங்களுக்கு நீண்டகாலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உதவும் வகையில், Ethera Diriya வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த DFCC வங்கி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் (SLBFE) இணைந்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், DFCC வங்கி பீஎல்சியின் துணைத் தலைவரும், தயாரிப்புகள் மற்றும் முன்மொழிவுகள், தனிநபர் மற்றும் வணிக வங்கிச் சேவைகள் பிரிவின் தலைமை அதிகாரியுமான அசித பின்னதுவ மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் 10 மில்லியன் ரூபா வரையிலான வீட்டுக் கடனைப் பெறலாம். இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படும். இக்கடன் தொகையை ஒரு குடியிருப்பு ஆதனத்தை நிர்மாணிக்க, கொள்முதல் செய்ய, புனரமைக்க அல்லது மேம்படுத்தப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் SLBFE-ஆல் செயல்படுத்தப்படும் வட்டி மீளளிப்பு நடைமுறையும் அடங்கும். தகுதியுள்ள கடன் பெறுநர்கள் பொருந்தக்கூடிய வட்டி மானியத்தின் மூலம் நிதி நிவாரணத்தைப் பெறுவார்கள். இது சொந்தமாக வீடு வாங்குவதற்கான செலவைச் சமாளிக்கக்கூடியதாக மாற்ற உதவும்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களைப் பொறுத்தவரை, சொந்தமாக வீடு வைத்திருப்பது என்பது வெறும் சொத்து வாங்குவதை விட மேலான ஒன்றாகும். இது, வீட்டை விட்டுத் தொலைவில் பல ஆண்டுகளாக அவர்கள் ஆற்றிய உழைப்பை, அவர்களுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு நிலையான சொத்தாக மாற்றும் வாய்ப்பாகும்.
“தங்கள் குடும்பங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இலட்சக்கணக்கான இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். அவர்களின் வருமானம் அன்புக்குரியவர்களுக்கு ஆதரவளிப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கும் முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது. Ethera Diriya திட்டத்தின் மூலம், அந்த உழைப்பை ஒரு பாதுகாப்பான வீடாகவும், பல ஆண்டுகளுக்குத் தங்கள் குடும்பங்களுக்குப் பயன்படும் சொத்தாகவும் மாற்ற அவர்களுக்கு உதவ விரும்புகிறோம், என்று அசித பின்னதுவ கூறினார்.
இந்தக் கூட்டாண்மை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பணம் அனுப்பும் பயனாளிகளுக்கான DFCC வங்கியின் DFCC ரட்டவிரு சேமிப்புக் கணக்கு உட்பட, பரந்த அளவிலான சேவைகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் நிதித் தேவைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தக் கணக்கு, கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள், ஒரு இலவச டெபிட் அட்டை மற்றும் பிரத்தியேக நிதித் தீர்வுகள் மற்றும் பிற நன்மைகளுக்கான அணுகலை வழங்குகிறது.
Ethera Diriya வீட்டுக் கடன் திட்டம், DFCC ரட்டவிரு சேமிப்புக் கணக்கு மற்றும் வங்கியின் பணம் அனுப்பும் சேவைகள் ஆகியவை இணைந்து, பணம் அனுப்புவது மற்றும் சேமிப்பது முதல் ஒரு வீட்டில் முதலீடு செய்வது வரை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிதிப் பயணத்தின் வெவ்வேறு கட்டங்களில் அவர்களுக்கு ஆதரவளிக்கின்றன.
பணம் அனுப்புதலின் மதிப்பானது, நாட்டிற்குள் வரும் பணத்தைக் கொண்டு மட்டுமல்லாமல், அந்தப் பணம் குடும்பங்களுக்கு எதைச் சாத்தியமாக்குகிறது என்பதைக் கொண்டும் அளவிடப்பட வேண்டும் என்பதை இந்த முயற்சி அங்கீகரிக்கிறது. ஒரு வீடு இன்று ஒரு ஸ்திரத்தன்மையை வழங்க முடியும், எதிர்காலத்திற்கான ஒரு சொத்தை உருவாக்க முடியும், மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை விட்டுப் பிரிந்து பணிபுரியும் நபர்கள் செய்யும் தியாகங்களுக்கு ஒரு பெரும் அர்த்தத்தைக் கொடுக்க முடியும்.
வாடிக்கையாளர்கள் எந்தவொரு DFCC வங்கி கிளைக்கும் செல்வதன் மூலமோ, 011 235 0000 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலமோ அல்லது www.dfcc.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ மேலும் தகவல்களைப் பெறலாம்.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
1955-இல் நிறுவப்பட்டு, 1956 முதல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள DFCC வங்கி பீஎல்சி, இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டதும், Fitch Ratings நிறுவனத்தால் A (lka) என மதிப்பீடு செய்யப்பட்டதுமான இவ்வங்கி, தனிநபர், நிறுவன மற்றும் சிறு-நடுத்தர தொழில் துறைகளுக்கான வங்கிச் சேவைகள் மட்டுமின்றி, திறைசேரி, முதலீடு மற்றும் வர்த்தக நிதித் தீர்வுகள் உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்குகிறது.
வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் நிலையான புத்தாக்கம் ஆகியவற்றைத் தனது முக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ள DFCC வங்கி, தங்குதடையற்ற மற்றும் பாதுகாப்பான வங்கிச் சேவைகளை வழங்குகிறது. இதில் DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 133 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பின் ஊடாக 6,000-க்கும் மேற்பட்ட ATM மையங்களை அணுகும் வசதி ஆகியவை அடங்கும்.
நிலைபேற்றியலுக்கான நிதியளிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட முன்னோடியாகத் திகழும் DFCC வங்கி, சுற்றுச்சூழலின் மீதான தாக்கத்தைக் குறைப்பதிலும், நீண்டகாலப் பொருளாதார உறுதித்தன்மையை மேம்படுத்துவதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.





























