Nov 8, 2026 - 03:23 PM

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினால் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை (09) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்படவுள்ளது.
நாளை ஆரம்பமாகும் இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரமானது, டெங்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் நிலவும் 74 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் செயற்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, கூட்டு டெங்கு பரிசோதனைக் குழுக்களை ஈடுபடுத்துவது, உரிமையாளற்ற இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பது மற்றும் சுத்தம் செய்வது, பாடசாலைகள், பிரிவேனாக்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் சார்ந்த விசேட துப்புரவுத் திட்டங்களை ஏற்பாடு செய்வது, கட்டுப்பாட்டு அறையொன்றின் மூலம் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பல பணிகள் இந்த வாரத்தில் நிறைவேற்றப்படவுள்ளன.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவிற்கு மேலதிகமாக, ஏனைய பங்காளர்களாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, 'க்ளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) செயலகம், இலங்கை பொலிஸ், முப்படை மற்றும் ஏனைய தன்னார்வ அமைப்புகள் இணைந்து பணியாற்றவுள்ளன.
































