Nov 8, 2026 - 12:46 PM

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதியளவில் வளிமண்டல தளம்பல் நிலையொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த தளம்பல் நிலையானது எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 15ஆம் திகதியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையக்கூடும் என திணைக்களத்தின் கடமைநேர வானிலை அதிகாரி உதேனி வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.
குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என்பதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மின்னல் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அத்துடன் நாட்டை சூழ்ந்துள்ள கடற்பகுதிகளிலும் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சாதாரண காற்று மணிக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்றாலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் தற்காலிகமாக மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் வானிலை நிலவரம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
































