Nov 8, 2026 - 10:46 AM

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (7) இடம்பெற்ற வீதி விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கல்முனை - மட்டக்களப்பு வீதியின் 392-வது கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் கல்முனை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த பாதசாரி கல்முனை வடக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பெரியநீலாவணையைச் சேர்ந்த 80 வயதுடையவர் ஆவார்.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தனமல்வில - வெல்லவாய வீதியின் தெளுல்ல பகுதியில், தனமல்வில நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியின் வலது புறமாகத் திரும்ப முயன்றபோது, எதிரே வந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த 64 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஹந்தபானாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், குடாஓயா பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அத்துடன், மாதம்பே - குளியாப்பிட்டிய வீதியின் கஹதெனியகம சந்தைக்கு அருகில், மாதம்பே நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்கு பிரவேசித்த கார் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காரின் சாரதியும் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் துனுகதெனிய, வலிபன்னகஹமுல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார். இது குறித்து தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று பிற்பகல் வேன் ஒன்றும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்த்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்துடன் பலமாக மோதியதே இந்த விபத்திற்குக் காரணமாகும்.
இவ்விபத்து தொடர்பாகப் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்த வேனின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
































