Nov 5, 2026 - 09:41 PM

புற்றுநோயாளிகளுக்குக் கதிர்வீச்சு சிகிச்சை சேவைகளை விரைவாகவும் திறம்படவும் வழங்குவதற்காக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் கதிர்வீச்சு சிகிச்சை கொள்ளளவை விரிவாக்குவதற்கு சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக விசேட முகாமைத்துவ மறுஆய்வுக் கூட்டம் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தலைமையில் அண்மையில் அபேக்ஷா வைத்தியசாலை கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றது.
கதிர்வீச்சு சிகிச்சைச் சேவைகளில் உள்ள தேவைகளைக் கண்டறிந்து, சிகிச்சை கொள்ளளவை அதிகரிப்பதுடன் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதும் இங்கு பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கு முன்னர் நடைபெற்ற முகாமைத்துவ மறுஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆய்வு செய்யப்பட்டது.
அத்துடன், கதிர்வீச்சு சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சைத் திட்டமிடலின் போது பயன்படுத்தப்படும் CT Simulator வசதிகளை முறைப்படியும் தொடர்ச்சியாகவும் பராமரித்தல், மருத்துவ உபகரணங்களைப் பராமரித்தல் மற்றும் தேவையான தொழில்நுட்ப வசதிகளைப் பூர்த்தி செய்தல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
































