Nov 3, 2026 - 09:42 AM

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இலங்கையிலும் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்திற்கான எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் செய்ய வேண்டிய செலவு சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
நேற்று (02) இரவு ஔிபரப்பான 'தெரண 360' நேரலை அரசியல் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், எரிபொருள் விலை தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் சில யோசனைகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, துறைமுகத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் விலைக்கே நுகர்வோருக்கு வழங்குமாறு எதிர்க்கட்சி தெரிவித்த போதிலும், உலகில் எந்தவொரு நாட்டிலும் அத்தகைய நடைமுறை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எரிபொருள் விலை உயர்வால் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 57 பில்லியன் ரூபாயை எரிபொருள் மானியமாக ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இருப்பினும், எரிபொருள் இறக்குமதிக்கு செய்ய வேண்டிய செலவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ள பின்னணியில், எரிபொருள் விலையை முழுமையாகக் குறைப்பதற்கோ அல்லது மேலும் பெருமளவிலான நிவாரணங்களை வழங்குவதற்கோ அரசாங்கத்தால் முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க பின்வருமாறு தெரிவித்தார்,
"உலக சந்தையில் எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, நமது நாட்டிலும் எரிபொருள் விலையை ஒப்பீட்டளவில் உயர்த்த வேண்டியிருந்தது. நம்மால் கட்டுப்படுத்த முடியாத மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாகவே இந்த அசாதாரண விலை உயர்வு ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் சில யோசனைகள் நடைமுறைக்கு சாத்தியமானவை அல்ல. துறைமுகத்திற்கு எரிபொருளைக் கொண்டு வரும் விலைக்கே நுகர்வோருக்கு ஏன் வழங்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் அடிக்கடி கேட்கிறார். ஆனால் உலகில் எந்தவொரு நாட்டிலும் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படும் விலைக்கே நுகர்வோருக்கு எரிபொருள் வழங்கப்படும் முறைமை பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை.
நான் முன்னரே கூறியது போல், வரிகளைக் குறைப்பதும் மானியங்களை வழங்குவதும் ஒன்றுதான். அதனால் இந்த பிரச்சினை எழுந்த ஆரம்ப கட்டத்திலேயே எரிபொருள் மானியம் வழங்குவதற்காக அரசாங்கம் 57 பில்லியன் ரூபாயை ஒதுக்கியது. நமது நாட்டில் எரிபொருள் இறக்குமதிக்கு செய்ய வேண்டிய செலவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதாவது இந்த பிரச்சினை இன்னும் நீடிக்கிறது. எனவே இதனை முழுமையாக தளர்த்துவதற்கான தருணம் இதுவல்ல." என்றார்.

































