Oct 3, 2026 - 09:19 PM

பொலிஸ் திணைக்களத்தின் முன்னால் மூன்று பிரதான சவால்கள் காணப்படுவதாகவும், அவற்றை வெற்றி கொள்வதற்காக மனித வள அபிவிருத்தி, அதிகாரிகளின் ஆளுமை விருத்தி அத்துடன் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டை உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ்மா அதிபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்தல் உள்ளிட்ட போதைப்பொருள் பேரழிவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு அல்லது வீதி ஒழுக்கத்தைப் பேணுதல் ஆகியவையே தற்போது நிலவும் பிரதான மூன்று சவால்கள் என வலியுறுத்தினார்.
ஒழுக்கக் கட்டுப்பாடு இல்லாத ஒரு நிறுவனம் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என்பதால், பொலிஸ் அதிகாரிகளின் ஒழுக்கம் தொடர்பாக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், ஆண்டொன்றுக்கு 2,000 முதல் 2,500 வரையிலான அதிகாரிகள் ஓய்வுபெறுவதுடன், விபத்துக்கள் மற்றும் இயற்கை காரணங்களால் மேலும் 250 பேர் வரை உயிரிழப்பதாகவோ அல்லது ஊனமுறுவதாகவோ பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, தற்போது இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 38,000 முதல் 40,000 வரையிலான அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 10,000 அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதுவரை சுமார் 1,500 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் 950 பேர் வரை விரைவில் இணைத்துக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டார்.
அத்துடன், நீண்டகாலமாக நிலவி வந்த பதவி உயர்வு தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் இங்கு சுட்டிக்காட்டினார்.
2019 ஆம் ஆண்டு வரை நிலவிய தாமதங்கள், 4,000க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகளை வழங்கி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அதன்பின்னர் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்காக மேலும் சுமார் 2,000 பேருக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நடைபெற்று வரும் தகுதி நேர்முகப் பரீட்சைகள் மற்றும் வரவிருக்கும் போட்டிப் பரீட்சைகள் மூலம் இதுவரை நிலவி வந்த பதவி உயர்வு தொடர்பான பிரச்சினை இந்த வருடத்திற்குள் முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கமைய, அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் உரிய நேரத்தில் பதவி உயர்வுகளை வழங்கும் நடைமுறை தயாரிக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் மேலும் வலியுறுத்தினார்.
இதேவேளை, சிக்கலான சமூகத்தில் பிரச்சினைகள் மற்றும் குற்றங்களைத் தீர்ப்பதற்கு அதிகாரிகளின் அறிவை இற்றைப்படுத்துவது அவசியமானது என்றும், அதற்காக விசேட பயிற்சி நெறிகள் அமுல்படுத்தப்படும் என்றும் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
இதன் மூலம் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதுவரை சுமார் 1,000 பேர் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தேவையான ஆங்கில அறிவுடைய எந்தவொரு அதிகாரியும் தனது பதவித் தராதரம் பாராது இந்தியப் புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய,
"புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேலை நேரத்தை மட்டும் பூர்த்தி செய்துவிட்டுச் சென்றுவிட்டோம் என்று மகிழ்ச்சியடைய முடியாது. அவ்வாறு மகிழ்ச்சியடைந்தவர்கள் வாழ்க்கையில் ஒரு நாள் வருத்தப்பட நேரிடும். ஏனெனில் 'எனது காலத்தில் நான் செய்ய வேண்டிய எதையும் சரியாகச் செய்யவில்லை' என்று...
எனவேதான் நான் பொலிஸ் சேவையின் அடிமட்டத்தில் இருந்து, இன்று இவ்வாறு பேசக்கூடிய நிலைக்கு வந்துள்ளேன்; ஏனெனில் என்னைப் பற்றிய ஒரு சுய பரிசீலனை எனக்குள் இருந்தது. அந்தச் சுய பரிசீலனையின் அடிப்படையில் நான் பொலிஸ்மா அதிபராக ஆன பின்னரும், எனது காலத்தில் பதில் பொலிஸ்மா அதிபராக நான் செய்த வேலைகள் தொடர்பாகவும், அதன் பின்னர் பொலிஸ்மா அதிபர் பதவி கிடைத்த பின்னர் செய்த விடயங்கள் தொடர்பாகவும் என்னிடம் ஒரு சுய பரிசீலனை இருந்தது.
அந்தச் செயல்திறனை நான் நிறைவேற்ற வேண்டும்; அது நிறைவேற்றப்பட வேண்டியது நான் பிரகாசிப்பதற்காக அல்ல, எனது சேவை பிரகாசிப்பதற்காகவே ஆகும். எனது இந்த பொலிஸ் சேவை பிரகாசிக்க வேண்டும். அவ்வாறு அந்தச் சேவை பிரகாசிக்க வேண்டும் என்றால், அது பொதுமக்கள் முன்னிலையில் பிரகாசிக்க வேண்டும். மக்களுக்குப் பொருத்தமில்லாத பொலிஸ், மக்களின் நம்பிக்கையை இழந்த பொலிஸ்... மக்களின் நம்பிக்கை இல்லாமல் ஒருபோதும் பொலிஸ் சேவையை நடத்த முடியாது" என்றார்.































