Sep 28, 2026 - 01:54 PM

ஹங்கேரியில் நடைபெற்ற UEFA Nations League கால்பந்து தொடரில், இஸ்ரேல் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அயர்லாந்து அணி வீரர்கள் இஸ்ரேல் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததுடன், இஸ்ரேலின் தேசியக் கீதம் இசைக்கப்பட்டபோது தலைகுனிந்தும் நின்றனர்.
அத்துடன், அயர்லாந்து அணியின் தலைவர் டாரா ஓ'ஷே (Dara O’Shea) மற்றும் இஸ்ரேல் அணியின் தலைவர் மனோல் சொலமன் (Manor Solomon) ஆகியோருக்கு இடையிலான வழக்கமான அணி நினைவுக் கொடிகள் (pennants) பரிமாற்றமும் நடைபெறவில்லை.
காசா போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அயர்லாந்து வீரர்கள் கருப்புப் பட்டி அணிந்து விளையாடினர்.
காசா போர் காரணமாக இஸ்ரேலுக்கு எதிரான போட்டிகளை அயர்லாந்து புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அந்த நாட்டில் தீவிரமடைந்த பின்னணியிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நடுநிலையான இடத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் விளையாட அயர்லாந்து வீரர்கள் பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் தீர்மானித்த போதிலும், போட்டிகளுக்கு முந்தைய வழக்கமான கைகுலுக்கல் நிகழ்வில் பங்கேற்பதில்லை என முடிவு செய்தனர்.
இதேவேளை, "இந்த போட்டியில் பங்கேற்பது தவறு" எனக் கூறி அயர்லாந்து அணியின் கோல் காப்பாளர் (Goalkeeper) கெவின் பாஸுனு (Gavin Bazunu) போட்டியில் இருந்து விலகினார்.
எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் அயர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் இஸ்ரேலை தோற்கடித்தது.































