Sep 28, 2026 - 11:25 AM

இரண்டு வருடத்தில் இந்த அரசாங்கம் என்ன செய்தது என்று எதிர்கட்சி உறுப்பினர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்லும் பதில் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நினைவுகள்தான். அன்று இந்த நாடு வங்குரோத்து அடைந்த நாடாக உலக நாடுகளால் பேசப்பட்டது. ஆனால், இன்று இரண்டே வருடங்களில் வளர்ச்சியடைந்து வரும் நாடாகவும், வளர்ச்சியடையும் நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கும் இலங்கையைக் கொண்டு வந்திருப்பது இந்த அரசாங்கம்தான்" என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணக் கலைச்செல்வி தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்று நேற்று (27) டயகம பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அதுமட்டுமன்றி, இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதி ஒன்று உள்ளது. இந்த நாட்டை ஒரு வளமான நாடாக்குவதாக இருந்தால், கடந்த காலங்களில் ஒரு 'திருட்டுக் குகையாக' பயன்படுத்தப்பட்ட அரசியலை மாற்ற வேண்டும்.
இன்று திருடர்கள் பிடிபடுவதை நாமும் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நாட்டின் மக்கள் பணத்தையும், வரிப் பணத்தையும், உழைப்பையும் சூறையாடிய அரசியல்வாதிகள், சாதாரண நபர்கள் அல்லது அரச அதிகாரிகள் என யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு வருவோம் என்பது தேசிய மக்கள் சக்தி கொடுத்த வாக்குறுதியாகும். தலவாக்கலை மற்றும் நோர்வூட் பிரதேச செயலகப் பகுதி மக்களுக்கு இது இப்போது நன்கு விளங்கும்.
இந்த நாட்டு மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. அதற்கான அபிவிருத்தி வேலைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. கொழும்பு மத்திய பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு, 'மெட்ரோ பேருந்து சேவை' தொடங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் போக்குவரத்துத் துறையில் எவ்வாறான மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்பதற்கேற்ப எமது போக்குவரத்து அமைச்சர் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மேலும், மலையகப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான வேலைத்திட்டங்கள் கட்டம் கட்டமாக நடைபெற்று வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.































