Sep 28, 2026 - 08:39 AM

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி - கொழும்பு பிரதான வீதியின் பொத்துப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றொரு மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வஸ்கடுவை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையஇளைஞராவார்.
அதேபோல், மீகொடை, கொடகம - பாதுக்கை வீதியின் லியன்வல பகுதியில் கொடகம திசையை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுவரொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, பொரளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 54 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
இதற்கிடையில், நொச்சியாகம, புகுல்கடுவ வீதியின் 02 ஆம் கிலோ மீட்டார் தூணிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதகுகில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 53 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.































