Sep 28, 2026 - 07:26 AM

தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தின்க கீழ் ஜனாதிபதியின் தலைமையில் தொழில்முறை பொலிஸ் சேவை ஒன்றையும் தொழில்முறை பொலிஸ் அதிகாரியையும் உருவாக்க முடிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
85 ஆவது பொலிஸ் தடகள விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், பொலிஸ் சேவையின் தரமான வளர்ச்சிக்கு ஏற்ப பொலிஸ் சீருடையை புதிய தோற்றத்தில் வடிவமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், வரவிருக்கும் ஆண்டில் பொலிஸ் சேவைக்கு மேலும் 10,000 அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த அனைத்து பதவி உயர்வுகளும் சிரேஷ்டத்துவம், பணித்திறன், திறமைக்கான எல்லைக் கோடுகள் மற்றும் பரீட்சை முறைகளின் அடிப்படையில் இந்த ஆண்டிற்குள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
கீழ்நிலை முதல் உயர்நிலை வரையிலான அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் தராதரம் பாராது வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கான வழிமுறை தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கான அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிறப்பு அபாயக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனந்த விஜேபால இங்கு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால:
"இரண்டு வருடங்களாக இந்த பொலிஸ் சேவையை மேலும் உயர்த்தவும், தொழில்முறை பொலிஸ் சேவையாகவும் தொழில்முறை பொலிஸ் அதிகாரியை உருவாக்கவும் ஜனாதிபதி தலைமையில் சிறப்பு தலையீட்டை மேற்கொள்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால்தான் பொலிஸ் சேவையில் 10,000 பேரைச் சேர்த்துக்கொள்ள முடிகிறது. அதற்காக அடுத்த ஆண்டுக்குள் அந்த 10,000 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். அதேபோல், ஐந்து வருட காலமாகப் பதவி உயர்வுகள் வழங்கப்படாமல் இருந்தன. அந்த அனைத்துப் பதவி உயர்வுகளும் இந்த ஆண்டிற்குள் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையிலும், பணித்திறன் அடிப்படையிலும், திறமைக்கான எல்லைக் கோடுகள் அடிப்படையிலும் அல்லது பரீட்சை முறையின் அடிப்படையிலும் பூர்த்தி செய்யப்படும். அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் முறைப்படியாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதவி உயர்வுகளை வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. ஒரு முறைப்படியான இடமாற்ற முறையும் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இத்தகைய இடமாற்ற முறையின் மூலம் வீட்டிற்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு இடமாற்றம் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறையும் தயாரிக்கப்பட்டு வருகிறது."
"கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,000 பேருக்கு வெளிநாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் இவற்றை வலுப்படுத்தி, தராதரம் பாராது கீழ்நிலை முதல் உயர்நிலை வரை உள்ள அனைவருக்கும் வெளிநாட்டுப் பயிற்சி வழங்குவதற்கான வழிமுறையும் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்தச் சிறப்பு கடமை அர்ப்பணிப்பிற்காக அபாயக் கொடுப்பனவை வழங்க தற்போது அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குதல், ஏனைய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் மற்றும் பொலிஸ் சேவையின் தரமான வளர்ச்சிக்குப் பொருத்தமான வகையில் பொலிஸ் சீருடையைப் புதிய முறையில் வடிவமைப்பதற்கும் தேவையான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன." என்றார்.































