Sep 24, 2026 - 07:32 AM

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான சுமார் ஏழு மாதகால யுத்தத்தின் மத்தியில் ஈரான் ஒருபோதும் மண்டியிடாது என்றும், எனினும் மோதலுக்கு இராஜதந்திர தீர்வை எட்டத் தயார் என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
ஏதேனுமொரு உடன்பாட்டை எட்டத் தவறினால் இஸ்லாமியக் குடியரசை நிர்மூலமாக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்குப் பதிலளித்த பெசெஷ்கியன், தடைகள், அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரானிய மக்களின் எதிர்ப்புறுதி மேலும் அதிகரிக்கும் என்பதை அமெரிக்கா அறிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஏதேனுமொரு உடன்பாட்டை எட்டுவதாயின் ஈரானியக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க முடக்கல்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"முழு உலகமும் ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்திக் கொள்ளும்போது, நாங்கள் அதைப் பயன்படுத்துவது தடை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என அவர் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணை, ஈரானிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க முடக்கல்கள் காரணமாக கடந்த பெப்ரவரி மாத இறுதியில் யுத்தம் தொடங்கியதிலிருந்து முடங்கிக் காணப்படுகின்றது.
கடந்த ஜூன் மாதம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நீரிணையை மீண்டும் திறப்பதற்காக அமெரிக்காவும் ஈரானும் முதற்கட்ட உடன்பாட்டுக்கு வந்தபோதிலும், ஈரானியத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பமானதாலும் அமெரிக்கா மீண்டும் தடைகளை விதித்ததாலும் அந்த உடன்படிக்கை சில வாரங்களிலேயே முறிவடைந்தது.
இந்த பின்னணியில், நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத் தொடருக்கு மத்தியில், கட்டாரின் மத்தியஸ்தத்துடன் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராகச்சி மற்றும் அமெரிக்கத் தூதுக்குழுவின் தலைவர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருக்கு இடையே சில மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தைகள் பலனளிக்கும் என விட்காஃப் நம்பிக்கை வெளியிட்டபோதிலும், அமெரிக்க முடக்கல்களை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் உள்ளிட்ட ஈரானின் நிபந்தனைகள் மேலும் மாற்றமின்றி உள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.































