Sep 23, 2026 - 11:55 PM

பாராளுமன்றத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்) ஆகிய சட்டமூலங்கள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திகவின் தலைமையில் குறித்த குழு நேற்று (22) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டன.
சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பரிந்த ரணசிங்க உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சட்டவரைவு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026.09.22 அன்று சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவினால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட குறித்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் குறித்தும் சட்டமா அதிபர் குழுவிற்கு விளக்கமளித்தார்.
அத்துடன், இரு சட்டமூலங்களுடனும் தொடர்புடைய விடயங்கள் குறித்து குழு உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களின் மூலம் நீதித்துறையின் ஆற்றலை விரிவுபடுத்துதல், மேன்முறையீட்டு நீதிக்கான பிராந்திய மட்டத்திலான அணுகலை மேம்படுத்துதல், விசாரணையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்தல், நீதிபதிகளின் அனுபவத்தைத் தக்கவைத்தல் மற்றும் நீதிபதிகளை நியமிக்கும் நிறுவன ரீதியான செயன்முறையை மேம்படுத்துதல் ஆகியவை நோக்கங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது. பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதுடன், வழக்குகளின் தரப்பினர்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவையையும் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், மாகாண மட்டத்திலான மேல் நீதிமன்றங்களின் நீதித்துறை ஆற்றலை அதிகரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண மேல் நீதிமன்றங்கள் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் ஆரம்ப நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதுடன், 2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்குப் பின்னர் மாகாண சிவில் மேல் நீதிமன்றங்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன.
இதன் விளைவாக வழக்குகள் குவிந்து காணப்படுவதும், அவற்றை நிறைவு செய்வதில் ஏற்படும் தாமதங்களும் காரணமாக மேலதிக நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்கள் மற்றும் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு ஏதுவாக, அதிகபட்ச மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிப்பதற்காக நீதித்துறை அமைப்புச் சட்டத்தின் 4ஆவது பிரிவைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது.
சட்டரீதியான ஓய்வுபெறும் வயதெல்லைகளைத் திருத்துவதன் மூலம் அனுபவமிக்க நீதித்துறை அதிகாரிகளின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதும் இந்தத் திருத்தங்களின் மற்றுமொரு நோக்கமாகும்.
இதற்கமைய, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயதை 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.































