Sep 22, 2026 - 04:52 PM

Mosvold Villa அஹங்கம மற்றும் Sundara by Mosvold பலபிட்டிய ஆகியவற்றைத் தன்வசம் கொண்டுள்ள Mosvold Sri Lanka நிறுவனம், Mosvold Martinus Foundation உடன் இணைந்து, Mosvold Sixes தொடரின் இரண்டாவது பதிப்பை 2026 ஒக்டோபர் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மலே கிரிக்கெட் கழக மைதானத்தில் நடத்தவுள்ளது.
சுற்றுலாத் துறையின் மிகவும் வேலைப்பளு நிறைந்த காலப்பகுதி ஆரம்பமாவதற்கு முன்னதாக, போட்டித்தன்மை, வணிகத் தொடர்புகள் மற்றும் கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு நாளாக அமையும் இந்த 6 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் தொடரில் சுற்றுலாத்துறை சார்ந்த 20 முன்னணி சுற்றுலா முகாமைத்துவ நிறுவனங்கள் போட்டியிடவுள்ளன.
மு.ப. 8.30 முதல் பி.ப. 10.00 மணி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், உணவு வகைகள் மற்றும் பியர் போன்றனவும் நாள் முழுவதும் கிடைக்கும். இறுதிப் போட்டி நிறைவடைந்தவுடன், இசை மாலைப் பொழுதில் போட்டித் தொடர் பிரவேசித்து, போட்டியாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு களிப்பூட்டும் மாலைப் பொழுதை வழங்கும். தற்போது இரண்டாவது ஆண்டாக நடைபெறும் Mosvold Sixes போட்டித் தொடர், புதிய சுற்றுலாப் பருவகாலத்தை ஆரம்பித்து வைக்கும் ஒரு நிகழ்வாகப் பயணத்துறையினரை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
தீவிரமான வேலைப்பளுமிக்க சுற்றுலாப் பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாக, சுற்றுலா முகவர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் வர்த்தகப் பங்காளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரையாடவும், கிரிக்கெட் விளையாடவும், மன அமைதி பெறவும் இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. இப்போட்டித் தொடரை வெளிநாட்டுச் சுற்றுலா முகவர்களுக்கும் விரிவுபடுத்துவதே தனது நீண்டகால இலக்கு எனத் தெரிவித்துள்ள Mosvold Sri Lanka, இதன் மூலம் உள்நாட்டுப் சுற்றுலாப் பிரயாணத்துறை எவ்வாறு இயங்குகிறது, மகிழ்கிறது மற்றும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறது என்பதை சர்வதேசப் பங்காளர்கள் நேரில் கண்டுகொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இப்போட்டித் தொடரின் சாம்பியன் கிண்ணமான Mosvold Martinus Foundation Challenge Trophy, திட்டமிடப்பட்டு இவ்வறக்கட்டளையின் நாமத்தினால் பெயரிடப்பட்டுள்ளது. சமுதாயத்திற்கு மீண்டும் பயனளிக்கும் நற்பணி, இந்நிகழ்வின் மையப்பொருளாக விளங்குவதுடன், இவ்வறக்கட்டளையின் பணிகள் கல்வி, மகளிர் மேம்பாடு மற்றும் சமூக உயர்ச்சி ஆகிய துறைகளில் பரந்து விரிந்துள்ளன.
இவ்வாண்டின் போட்டித் தொடரில் பங்கேற்பதை பின்வரும் 20 சுற்றுலா மேலாண்மை நிறுவனங்களும் (DMCs) உறுதிப்படுத்தியுள்ளன. Tangerine Tours, Sri Lanka Tailormade, Olanka Travels, Antiquity Sri Lanka, Travel Trends Leisure, House of Travels & Tourism, NKAR Travels & Tours, Jetwing Travels, Walkers Tours, Connaissance de Ceylan, Delux Holidays, Ceylon Roots, Spiceland Holidays, Infinity Vacations, Tropiculture, Serene Travels, Authenticities, Red Apple Travel & Holidays Lanka, DTH Travel Lanka மற்றும் Ceylon Tours ஆகியன அவற்றில் அடங்குகின்றன.
Mosvold Sri Lanka இன் இணை ஸ்தாபகரும், முகாமைத்துவ பணிப்பாளருமான நிலங்க மார்டினஸ் கருத்துத் தெரிவிக்கையில், “நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற விரும்பும் சிறந்த முறையில், புதிய சுற்றுலாப் பருவகாலத்தைத் தொடங்குவதற்கான எமது முயற்சியாக Mosvold Sixes அமைகின்றது. ஒரே மைதானத்தில் முழுப் பிரயாணத்துறையினரையும் ஒன்றிணைத்து, களத்தில் கடுமையாகப் போட்டியிடவும், மகிழ்ந்திருக்கவும், சகலதற்கும் மேலாக நாம் ஏன் இந்தத் துறையில் பயணிக்கிறோம் என்பதை மீண்டும் நினைவூட்டிக்கொள்ளவும் இது ஒரு நல்வாயப்பாக அமைகிறது.
சம்பியன் கிண்ணத்திற்கு Mosvold Martinus Foundation இன் பெயரிடப்பட்டிருப்பது இந்நோக்கத்தின் தூய்மையை உணர்த்துகின்றது. ஏனெனில், கல்வியில் முதலீடு செய்வதாகட்டும், பெண்களை வலுப்படுத்துவதாகட்டும் அல்லது எம்மைச் சுற்றியுள்ள சமூகங்களை உயர்த்துவதாகட்டும், எமது வெற்றியைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும்போது, அதற்குப் பூரண அர்த்தம் கிடைப்பதாக நாம் நம்புகிறோம். எதிர்காலத்தில் எமது சர்வதேசச் சுற்றுலாப் பங்காளர்களும் இந்த மைதானத்தில் எம்முடன் கைகோர்க்கும் நாளுக்காக நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.
அறிமுக போட்டித் தொடரில் வெற்றியீட்டிய Connaissance de Ceylan, இந்தப் போட்டித் தொடரில் நடப்புச் சம்பியனாக பிரவேசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





























