Sep 20, 2026 - 10:02 PM

கம்பஹா, இம்புல்கொட, ராஜசிங்க மாவத்தையிலுள்ள வாடகை வீடொன்றில் பெருமளவில் போலிப் பட்டச் சான்றிதழ்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நிறுவனங்களின் முத்திரைகளை அச்சிட்டு வந்த நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், நபரொருவரைக் கைது செய்துள்ளனர்.
கம்பஹா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, புலனாய்வாளர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நுட்பமான விசாரணையைத் தொடர்ந்து, யக்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தங்காலையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞராவார்.
மாதமொன்றிற்கு 35,000 ரூபாய் வாடகைக்குப் பெறப்பட்ட வீடொன்றிலேயே இவர் இந்த மோசடியை முன்னெடுத்து வந்துள்ளார்.
இந்த முற்றுகையின் போது 2 மடிக்கணினிகள், 2 ஸ்மார்ட் கைபேசிகள், 1 வர்ண அச்சு இயந்திரம் , 35 போலிச் சான்றிதழ்கள், நிறுவனத் தலைவர்களின் 51 உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் 3 எம்போஸ் (Emboss) முத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவர்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் கடிதத் தலைப்புகளும் (Letterheads) இந்த இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை பரீட்சைத் திணைக்களம், தனியார் வங்கியொன்று மற்றும் பேராதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர, களனி, மொரட்டுவை, ருஹுண, ரஜரட்ட, வயம்ப, ஊவா வெல்லஸ்ஸ உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் அடங்குகின்றன.
சுமார் ஒரு வருட காலமாக இந்தச் சட்டவிரோதத் தொழில் இடம்பெற்று வந்துள்ளதோடு, சாதாரண சான்றிதழ்களைச் சந்தேகநபர் 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரையிலான தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.
எனினும், ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்குத் தேவையான போலிச் சான்றிதழ்களை 4 இலட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு தயாரித்துக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இதுவரை சுமார் 200 பேர் வரை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகச் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
யக்கல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.





























