Sep 20, 2026 - 05:11 PM

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தின் போது நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸயில் தற்சமயம் இடம்பெற்று வரும் மக்கள் சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மத்திய கிழக்கில் போர் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் காணப்பட்ட எண்ணெய் விலையின் மட்டத்திற்கே உலகச் சந்தையில் மீண்டும் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
இதனால் எமக்கு ஒரு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயரும்போது உள்நாட்டிலும் விலையை உயர்த்த மட்டுமே என்றால் ஓர் அரசாங்கம் எதற்கு என்று முன்பு சிலர் கேட்பதுண்டு.
ஆனால், இம்முறை நாம் உலகச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலையை உயர்த்த மாட்டோம்.
நாங்கள் என்ன செய்தோம்? ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்களிலும் ஒவ்வொரு லீட்டர் டீசலுக்கும் அரசாங்கம் 100 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கியது.
தற்போது மீண்டும் உலகச் சந்தையில் விலை அதிகரித்துள்ளதால், வருகின்ற ஒக்டோபர் மாதத்தில் எண்ணெய் விலையை உயர்த்த வேண்டும்.
இறக்குமதி செலவினங்களைக் கணக்கிட்டுப் பார்த்தால், எதிர்வரும் 1ஆம் திகதியிலிருந்து விலை உயர வேண்டும்.
ஆனால், அரசாங்கம் நிவாரணத்தை வழங்கி அந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தும்.
ஒரு பெரும் சுமையோ அல்லது அனர்த்தமோ ஏற்படும் போது, அதை அப்படியே முழுமையாக மக்கள் மீது சுமத்திவிட முடியாது. அரசாங்கம் அதற்கு ஏதேனும் ஓர் உதவியைச் செய்ய வேண்டும்.
மீனவ மக்களால் கடலுக்குச் செல்ல முடியாமல் போன போது, நாம் என்ன செய்தோம்? அந்த டீசல் நிவாரணத்திற்கு மேலதிகமாக மீனவ மக்களுக்கு லீட்டரொன்றிற்கு மேலும் 50 ரூபாய் வழங்கினோம்.
ஒரு நாளைக்கு 25 லீட்டர் வீதம், மாதத்தில் 25 நாட்களுக்கு மொத்தமாக 625 லீட்டருக்கு லீட்டருக்கு 50 ரூபாய் வீதம் மாதத்திற்குச் சுமார் 31,250 ரூபாய் கொடுப்பனவை வழங்கினோம்.
ஏனெனில், மக்களைக் காப்பாற்ற வேண்டும், பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் இயல்புக்கு மாறான ஒரு நெருக்கடி ஏற்படும் போது மட்டுமே நாம் இவ்வாறு நிவாரணம் வழங்குகிறோம்.
எண்ணெய் விலை சாதாரண நிலைக்கு வந்தால் நிவாரணம் வழங்க மாட்டோம்.
ஆனால், விலையை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத பட்சத்தில் நாம் நிவாரணம் வழங்குவோம். மின்சாரக் கட்டணத்திற்கும் தற்போதும் நாம் மானியம் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.





























