Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் முழு பின்னணி அம்பலம்!

Jul 14, 2026 - 07:40 PM

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் முழு பின்னணி அம்பலம்!
Mobitel Inner 1278

சமீபத்தில் மோதல் வெடித்த நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் நடத்தப்பட்ட விசாரணைகளில் 271 வெற்றுத் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (14) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விபரம் தெரிவிக்கப்பட்டது.

 

இதன்போது, பதற்றநிலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சிறைச்சாலையில் இருந்த 2,417 கைதிகள் அனைவரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா உத்தரவிட்டார்.

 

நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் விடயங்களை விளக்கிய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு 01 இன் விசாரணை அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 40 அதிகாரிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

 

"கனம்பொருந்திய நீதிபதி அவர்களே, இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, சம்பவம் நடந்த நேரத்தில் சிறைச்சாலையில் இருந்த மொத்த கைதிகளின் எண்ணிக்கை 2,417 ஆகும். சிறைச்சாலை ஊழியர்கள் 166 பேரும் இருந்துள்ளனர்."

 

"பதற்ற நிலைக்குக் காரணமான முதலாவது சம்பவம் கடந்த ஜூலை 05ஆம் திகதி நடந்துள்ளது. பொதுவாக கைதிகளுக்கு உடற்பயிற்சி செய்வதற்காக 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும். அன்றைய தினம் A(1) வார்டில் வைக்கப்பட்டிருந்த 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்ற கைதி, தனக்கு உடற்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் தருமாறு கேட்டு சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அன்றைய தினமே A(1) வார்டின் கதவு திறக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், சுரேஷ் என்ற இந்த கைதி வார்டில் இருந்து வெளியே தப்பி ஓடி, 02ஆம் வார்டில் இருந்த கைதிகள் குழுவொன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுவே பதற்ற நிலைக்குக் காரணமான ஆரம்ப சம்பவமாகும். இதன் போது ஆரம்பத்தில் இரண்டு கைதிகளும், பின்னர் மற்றுமொருவருமாக மொத்தம் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்."

 

"இந்த மோதல் தீவிரமடைந்து கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்திற்கு சேதம் விளைவித்துள்ளனர். சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடமும் கைதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. 5ஆம் திகதி மாலையிலேயே சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாருக்குத் தெரிவித்து பாதுகாப்பைக் கோரியுள்ளனர். நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் அதிகாரிகள் வந்தபோதிலும், நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து அவசர தந்திரோபாயப் படையின் 89 அதிகாரிகள் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர்."

 

"5ஆம் திகதி இரவும் கைதிகள் கூரை மீது ஏறி, குழுவாக இணைந்து வன்முறையில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. மறுநாள் காலையில் உணவு வழங்குவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளே சென்றபோது மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. 'அதிகாரிகளை அடிக்கக் காத்திருக்கிறார்கள், நீங்கள் வெளியேறுங்கள்' என்று சில கைதிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். முற்பகல் 10.30 முதல் 10.50க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பதற்றநிலை பெரும் மோதலாக மாறியது."

 

"நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அவசர தந்திரோபாயப் படையினர் உள்ளே சென்றபோது, கைதிகள் திட்டமிட்டு கற்கள், தடிகள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களின் இரும்புப் பாகங்களைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த மோதலுக்கு மத்தியில் நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் வெளியேற முடிந்த போதிலும், சிறைச்சாலையின் கட்டமைப்பு குறித்து சரியான புரிதல் இல்லாததால் கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகளால் வெளியே வர முடியாமல் போனது."

 

"முதல் நாளில் பதற்றநிலை ஏற்பட்ட போது, சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கின் ஒரு பகுதியிலிருந்த ஆயுதங்கள் அகற்றப்பட்டிருந்தன. ஆனால், மற்றுமொரு பகுதியிலிருந்த ஆயுதங்கள் மோதலின் போது கைதிகளின் கைகளுக்குச் சென்றுள்ளன. மோதலின் போது சிறைச்சாலையின் உள்பகுதியிலிருந்து அதிகாரிகளை நோக்கி துப்பாக்கி நீட்டப்பட்டுள்ளது. 

 

அந்தச் சந்தர்ப்பத்திலேயே விசேட அதிரடிப்படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். அப்போதும் நிலைமை கட்டுக்குள் வராததால் அவர்கள் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர். அதற்கும் கைதிகள் கட்டுப்படாத போதே, அதிகாரி ஒருவர் சிறைச்சாலை வாயிலின் துவாரத்தினூடாக உள்ளே நோக்கிச் சுட்டுள்ளார். அதன் பின்னரே விசேட அதிரடிப்படையினர் உள்ளே நுழைந்தபோது கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகள் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்." என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

விசாரணை அதிகாரிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து மேலும் விளக்குகையில்:

 

"கனம்பொருந்திய நீதிபதி அவர்களே, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது ஒரு T58 துப்பாக்கியும், ஒரு தோட்டாப் பெட்டியும் சிறைச்சாலைக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிறைச்சாலை வளாகத்திற்குள் இருந்து 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு அமைவாக, இதுவரை நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்த 50 துப்பாக்கிகளும், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சென்ற அதிகாரிகளிடமிருந்த 10 துப்பாக்கிகளுமாக மொத்தம் 60 துப்பாக்கிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன. 

 

சிறைச்சாலைக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரலிடமிருந்து அறிக்கை கோரப்பட வேண்டியுள்ளது. சிறைச்சாலையின் CCTV காட்சிகளை உள்ளடக்கிய 2 DVR வன்வட்டுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை மொரட்டுவ பல்கலைக்கழக கணினி தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அறிக்கை பெறப்பட வேண்டும். இந்த விசாரணைக்கு சட்டமா அதிபரின் உதவியையும் கோரியுள்ளோம். தற்போது தண்டனைச் சட்டக்கோவையின் 296வது பிரிவின் கீழ் கொலைக் குற்றம் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் கீழும், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் முடிவில் சந்தேகநபர்கள் பெயரிடப்படுவர்." என்றனர்.

 

முன்வைக்கப்பட்ட விபரங்களை பரிசீலித்த நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா, மோதல் நடந்த நேரத்தில் சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

 

அத்துடன், அந்த நேரத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து தற்போது வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள அனைத்து கைதிகளிடமிருந்தும், சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரலின் மேற்பார்வையின் கீழ் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

 

இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278