Nov 6, 2026 - 02:06 PM

கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, விசாரணைகளை நிறைவு செய்து அது குறித்த விடயங்களை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு மற்றும் அதன் குத்தகை தவணைக் கட்டணங்களைச் செலுத்துவதற்குப் பணம் கிடைத்த விபரங்களை உறுதிப்படுத்தத் தவறியதையடுத்தே, வருணி போகஹவத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வசமிருந்த அதிநவீன கார் ஒன்றும் கடந்த நாட்களில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தனது பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டிருந்தது.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபரொருவரால் குறித்த காரின் குத்தகைத் தவணைகள் செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்தமையே இந்த விசாரணைகளுக்குக் காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
































