Nov 4, 2026 - 12:16 PM

இலங்கையின் தனியார் சுகாதாரத்துறையில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லைப் பதிவுசெய்யும் வகையில், நவலோகா வைத்தியசாலை நீர்கொழும்பில், மேம்பட்ட இருதய சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட “ஸ்ரீனி தர்மதாச இருதய சிகிச்சை நிலையத்தை” (Sreeni Dharmadasa Heart Care Centre) பிரமாண்டமாகத் திறந்து வைத்துள்ளது. இந்த நிலையத்தில் நவீன இருதய சிகிச்சைத் தொழில்நுட்பங்களுடன் கூடிய வழிகாட்டப்பட்ட சிகிச்சைத் தள [Guided Therapy Platform] வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் மேம்பட்ட இருதய மற்றும் இரத்த நாள சிகிச்சைத் தொழில்நுட்பங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இவை சிகிச்சையின் துல்லியம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதுடன், நோயாளர்களை மையப்படுத்திய உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் வழிவகுக்கின்றன. கொழும்புக்கு அப்பால், விசேட இருதய சுகாதாரப் பராமரிப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முதலீடாக இந்த நிலையம் அமைந்துள்ளது. நவீன மருத்துவத் தொழில்நுட்பம், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் மேம்பட்ட நோயறிதல் வசதிகள், படவழிகாட்டல் அடிப்படையிலான சிகிச்சை முறைகள் ஆகியவற்றை நீர்கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் அண்மித்ததாகக் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் மருத்துவச் சிறப்பு, நோயாளர் பாதுகாப்பு, சிகிச்சைச் சேவைகளின் அணுகல் வசதி மற்றும் நியாயமான செலவில் தரமான மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல் ஆகியவற்றில் தனது அர்ப்பணிப்பை நவலோக வைத்தியசாலை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் திறப்பு விழாவில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிறிஷாந்த அபேசேன மற்றும் நீர்கொழும்பு மாநகர சபை முதல்வர் கௌரவ டபிள்யூ. ஈ. டி. துலிப் சமர பெர்னாண்டோ ஆகியோர் பிரதம
விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு, பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நவலோக வைத்தியசாலையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
திறப்பு விழாவில் உரையாற்றிய ஹர்ஷித் தர்மதாச,“இந்த முதலீட்டின் மூலம் நவீன மருத்துவப் படமெடுக்கும் தொழில்நுட்ப வசதிகளை மக்களுக்கு மேலும் அண்மித்ததாகக் கொண்டு வந்துள்ளோம். அதேவேளை, நிபுணத்துவ மருத்துவ சேவைகளுக்கும் நோயாளர் பாதுகாப்புக்கும் நாம் முன்னுரிமை அளிக்கிறோம். இலங்கை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் சுகாதாரப் பராமரிப்பை நோக்கி முன்னேறி வரும் நிலையில், புத்தாக்கங்களும் தொழில்நுட்பங்களும் தாமதமற்ற சிகிச்சை, சிறந்த சேவைப் பெறுமதி மற்றும் தரமான மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றில் பயனளிப்பதாக அமைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்தப் புதிய சிகிச்சை நிலையத்தின் மைய அம்சமாக Philips Azurion 7 C20 நோயறிதல் மற்றும் படவழிகாட்டல் சிகிச்சைக் கட்டமைப்பு அமைந்துள்ளது. இது நவீன மருத்துவப் படமெடுக்கும் தொழில்நுட்பம், மருத்துவ மென்பொருள் மற்றும் சீரமைக்கப்பட்ட சிகிச்சைச் செயற்பாட்டு வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்த மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்பாகும். இதன் மூலம் நோயறிதல் மதிப்பீடுகள் மற்றும் படவழிகாட்டல் அடிப்படையிலான சிகிச்சை முறைகளின்போது, இருதய சிகிச்சை நிபுணர்களுக்கு அதிக துல்லியத்துடனும் செயல்திறனுடனும் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த நவீன மருத்துவக் கட்டமைப்பின் மூலம், மேம்பட்ட காட்சித் தகவல்களின் துணையுடன் படவழிகாட்டல் அடிப்படையிலான சிகிச்சைகளை மருத்துவ நிபுணர்கள் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் துல்லியமான மருத்துவ மதிப்பீடுகளை முன்னெடுப்பதுடன், பொருத்தமான சந்தர்ப்பங்களில் குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட சிகிச்சை முறைகளையும் கையாள முடிகிறது. இத்தகைய சிகிச்சைகளின்போது மருத்துவத் தீர்மானங்கள், சிகிச்சைத் திட்டமிடல் மற்றும் நோயாளர் பராமரிப்பு தொடர்பான முழுப் பொறுப்பும் மருத்துவ நிபுணர்களிடமே இருக்கும்.
கதிர்வீச்சின் அளவை நிர்வகிக்கும் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள Azurion தொழில்நுட்பக் கட்டமைப்பு, உயர்தர மருத்துவப் படங்களைப் பெறுவதற்கு உதவுவதுடன், மருத்துவக் குழுவினர் எக்ஸ்-கதிர் கதிர்வீச்சுக்கு உள்ளாகும் அளவைக் கட்டுப்படுத்தவும் துணைபுரிகிறது. அத்துடன், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு வசதிகள், வினைத்திறன் மிக்க சிகிச்சைச் செயற்பாட்டு நடைமுறைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தேவைக்கேற்ப நெகிழ்வாக நிலைநிறுத்தும் வசதி ஆகியவை, சிக்கலான சிகிச்சைகளின்போது மருத்துவ நிபுணர்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பையும் சிகிச்சைச் செயல்திறனையும் உறுதிப்படுத்த உதவுகின்றன.
ஸ்ரீனி தர்மதாச இருதய சிகிச்சை நிலையத்தின் நிறுவல், இப்பிராந்தியத்தில் விசேட இருதய மற்றும் இரத்த நாள சிகிச்சை சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் நோயாளர்களுக்கு ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது. மேம்பட்ட நோயறிதல் வசதிகள் மற்றும் படவழிகாட்டல் அடிப்படையிலான சிகிச்சைத் தொழில்நுட்பங்களை மக்களின் இருப்பிடங்களுக்கு அண்மித்ததாகக் கொண்டு வந்துள்ளதன் மூலம், நோயாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் தொலைதூர மருத்துவ நிலையங்களுக்குப் பயணிக்க வேண்டிய தேவையைக் குறைப்பதை வைத்தியசாலை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் விசேட மருத்துவப் பராமரிப்பைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிரமங்களையும் பொருளாதாரச் சுமைகளையும் குறைக்க முடியும்.
தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு அப்பால், தரமான தனியார் மருத்துவ சேவைகளைப் பரந்துபட்ட மக்களும் இலகுவாகவும் நியாயமான செலவிலும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான விரிவான அர்ப்பணிப்பையும் இந்தச் சிகிச்சை நிலையம் வெளிப்படுத்துகிறது. வினைத்திறன் மிக்க மருத்துவச் செயற்பாட்டு நடைமுறைகள், ஒருங்கிணைக்கப்பட்ட விசேட மருத்துவ சேவைகள் மற்றும் வெளிப்படையான கட்டண முறைமைகள் ஆகியவற்றின் மூலம், உயர்தர மருத்துவப் பராமரிப்பைப் பேணிக்கொண்டே நோயாளர்களுக்குச் சிறந்த சேவைப் பெறுமதியை வழங்க முடியும்.
இந்தத் திறப்பு விழா, இலங்கையின் சுகாதாரத்துறை டிஜிட்டல் புத்தாக்கங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடனான புதிய தொழில்நுட்பங்களை அதிகளவில் உள்வாங்கி வரும் ஒரு காலகட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை, மருத்துவ நிபுணத்துவம், நம்பகமான மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் நோயாளர்களை மையப்படுத்திய சிகிச்சை அணுகுமுறைகளுடன் ஒருங்கிணைப்பது, எதிர்கால சுகாதார சேவைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது.
ஸ்ரீனி தர்மதாச இருதய சிகிச்சை நிலையத்தின் திறப்பின் மூலம், இலங்கையில் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற நவீன தனியார் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் நீர்கொழும்புநவலோக வைத்தியசாலை மற்றுமொரு முக்கிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. இதன் ஊடாக, தான் சேவையாற்றும் பிராந்திய மக்களுக்கு நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களையும் நிபுணத்துவ மருத்துவ சேவைகளையும் மேலும் அண்மித்ததாகக் கொண்டு வருவதுடன், தரம், பாதுகாப்பு, அணுகல் வசதி மற்றும் கட்டுப்படியான செலவு ஆகியவற்றைத் தனது சேவைகளின் அடிப்படை அர்ப்பணிப்பாகக் கொண்டு தொடர்ந்து செயற்படுவதையும் வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.
































