Nov 2, 2026 - 05:33 PM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன், பாராளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, இன்று (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அ. தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேரையும், எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் குறித்து, முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டதாகக் கூறி, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம் ஆகியோருக்கு எதிராகவும், சில யூடியூப் மற்றும் முகநூல் தளங்களுக்கு எதிராகவும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, குறித்த 6 பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக எழுதுவதற்கு கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்ததுடன், எதிராளிகளை நீதிமன்றில் ஆஜராகுமாடியும் உத்தரவிட்டிருந்தது. அதற்கமைய வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று (02) மட்டகளப்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றில் ஆஜராகினர்.
இவ்வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா சார்பில் சட்டத்தரணி கௌசல்யாவும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம் ஆகியோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கியாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினரும் ஆஜராகினர்.
இதன்போது, எதிர் தரப்பினர் சார்பில் காரணங்களைக் காட்டுவதற்குச் அவகாசம் கோரப்பட்டது. மேலும், 5 ஆம் எதிராளியான அஹமட் லெப்பை முகமது முத்தார் என்பவருக்கு நீதிமன்ற அழைப்பாணை கிடைக்கப்பெறாவிட்டாலும், அவர் நீதிமன்றில் ஆஜராகி நீதிமன்றத்தின் நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளைகளுக்குத் தாங்கள் ஒழுகுவதாகவும், அதற்கமைய தன்னை இவ்வ வழக்கிலிருந்து விடுவிக்குமாறும் அவரது சட்டத்தரணி ஊடாக சமர்ப்பணம் செய்தார்.
இதையடுத்து, எதிர் தரப்பினர் தமக்கான காரணங்களைச் சமர்ப்பிப்பதற்காகவும், மேலதிக நடவடிக்கைகளுக்காகவும் வழக்கினை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளதாக வழக்காளியான வைத்தியர் சுகுணன் சார்பில் சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா தெரிவித்தார்.
































