Nov 2, 2026 - 05:29 PM

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கை மத்திய வங்கி பிணைமுறி சம்பவம் தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் வழக்குக்கு பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக (Pre-trial Conference) ஜனவரி மாதம் 28 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (02) பிரியந்த லியனகே தலைமையிலான நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஜெஃப்ரி அலோசியஸ், கசுன் பாலிசேன உள்ளிட்ட பல சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரான பத்தினிகே சமரசிறி, முத்துராஜா சுரேந்திரன், சித்த ரஞ்சன் ஹுலுகல்லே மற்றும் பீ. குணவர்தன ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜரானவர்களில் அடங்குவர்.
இருப்பினும், இந்த வழக்கின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அஜான் கார்திய புஞ்சிஹேவா ஆகியோர் இல்லாத நிலையிலேயே வழக்கினை விசாரிப்பதற்கு நீதிமன்றம் முன்னதாகத் தீர்மானித்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, சில பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் தங்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட நீதிபதிகள் குழாம், அடுத்த வழக்குத் திகதிக்கு முன்னதாகப் பிரதிவாதிகள் தரப்பிற்குத் தேவையான ஆவணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஒஸ்வல்ட் பெரேராவுக்கு உத்தரவிட்டது.
2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி நடத்திய பிணைமுறி ஏலத்தில் அரசுக்கு 688 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
































