Oct 31, 2026 - 07:23 PM

ஆட்சி அதிகாரத்தைப் பெற்று இரண்டு வருடங்களுக்குள் அரசியல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (31) நடைபெற்ற தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இக்காலப்பகுதியில் அரசியல் அதிகாரத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்த்துள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஆட்சி அதிகாரத்தைப் பெற்று இரண்டு வருடங்களுக்குள் அரசியல் துறையிலேயே நாம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
அரசியல் அதிகாரத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்த்துள்ளோம்.
இவ்வாறானதொரு மாற்றமானது, பழைய சமூக அமைப்பில் சிறப்புரிமைகளையும் பாதுகாப்பையும் அனுபவித்த சிறிய குழுக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
உலகெங்கிலும் இத்தகைய மிகப்பெரிய மாற்றங்களுக்கு எதிராகப் பழைய சமூக அமைப்பின் பகுதியினர் கிளர்ந்தெழ முயல்கின்றனர்.
இருப்பினும், சமூகம் இந்த மாற்றத்துடன் கைகோர்த்து நிற்கிறது. ஏதேனும் சந்தேகம் உள்ள மக்கள் இருப்பார்களேயானால், கிராமங்கள் தோறும் சென்று மக்களின் மனசாட்சியை விழிப்படையச் செய்து அவர்களை நம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இந்த மாற்றத்தின் முன்னோடிகளாகவும், பாதுகாவலர்களாகவும், வழிகாட்டிகளாகவும் தயாராக வேண்டும்.
ஏனெனில், பழைய அரசியலின் எச்சங்கள் இந்த மாற்றங்களுக்கு எதிராக எழும்புகின்றன, அதனைப் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன.
சமீபத்தில் ஒருவர் கூறுகிறார், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ருவன்வெலிசாய தூபியை நிலத்தில் மூழ்கடிப்பதற்குத் திட்டமிடுகிறது என்று. இவ்வாறானதொரு விஷயம் எவ்வாறு சாத்தியமாகும்?
இந்த மாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போகும்போது மனக்குழப்பம் ஏற்படுகிறது. அவர்களின் கூற்றுகள் வெறுப்புப் பேச்சுகளாகவும் கற்பனைகளாகவும், அவர்களின் நடத்தைகள் குழப்பமான கேலிக்கூத்துகளாகவும் மாறியுள்ளன.
களிமண் உருவங்களில் ஊசிகளைக் குத்துவது போன்ற விகாரமான மனநிலைகள் மூலம் வெளிப்படுவது, இந்த அதிர்ச்சியையும் குழப்பத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிப்பதே ஆகும்.
முறையான, அமைப்பான மற்றும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட அரசியல் இயக்கங்கள் அல்லது போராட்டங்களால் ஒரு நாட்டிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
அவை சமூகத்திற்கு ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருகின்றன. ஆனால், அமைப்பற்ற, தொலைநோக்குப் பார்வையற்ற, அமைதியற்ற மற்றும் குழப்பமான மனநிலை கொண்ட குழுக்கள் சமூகத்தில் ஓர் அராஜகத்தை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிட்ட அபாயத்தைக் கொண்டுள்ளன.
எனவே, உங்களது போராட்டங்களை முறையானதாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் நடத்துங்கள் என எதிர்க்கட்சியினரிடம் கோருகின்றோம்.
இந்த அராஜகமான மற்றும் தொலைநோக்குப் பார்வையற்ற போராட்டங்களுக்குள்ளேயே அதற்கான அழிவின் அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளதால், அதுவே அதனை அழிவை நோக்கி கொண்டு செல்லும்.
எனவே, நாம் பதற்றமடையத் தேவையில்லை என்றாலும், தொடர்ச்சியாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நமது மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், வங்கியாளர்கள், விஞ்ஞானிகள், ஓய்வுபெற்ற இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பல துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பிரதிநிதிகளே, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான மாற்றத்தைப் பெற்றுத் தந்தது நீங்கள்தான்.
இந்த அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் ஒரு திருப்புமுனையாகவும் மாற்றமாகவும் நான் நம்புகிறேன்.
ஆனால், அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் நமக்கு பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
அந்த மாற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, ஒரே மனதுடன் பணியாற்றுவோம், சவால்களை எதிர்கொள்வோம், ஒன்றுபடுவோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
































