Oct 29, 2026 - 07:31 PM

ஹோமாகம பொலிஸ் காவலில் இருந்தபோது இஷார ஹர்ஷ என்ற நபர் உயிரிழந்த சம்பவம் தாக்குதல் காரணமாகவே நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்பட்ட போதிலும், அது குறித்து மருத்துவ அறிக்கையின் தகவல்களுக்கு அமைவாகவே இறுதியாக உறுதியாகக் கூற முடியும் என மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (29) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
"ஹோமாகம சம்பவத்தில், மருத்துவ அறிக்கையில் அவருடைய மூன்று விலா எலும்புகள் உடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அவரது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
அவரது மரணத்திற்கான காரணம் தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் மருத்துவ அறிக்கையின் தகவல்களுக்கு அமைவாகவே அதனை உறுதியாகக் கூற முடியும்.
சிறைக்கூட்டில் அடைப்பதற்கு முன்னர் அவர் குற்றப்பிரிவில் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அதற்குள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. எனினும் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை, அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.
































