Oct 25, 2026 - 09:41 PM

லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4வது போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்த பாகிஸ்தான் அணி, ஷதாப் கானின் அதிரடி சதத்தால் 1 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க த்ரில் வெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆரம்பத்திலேயே ஷஹீன் அஃப்ரிடியின் புயல் வேகப் பந்துவீச்சில் டொம் பென்டன் (4), ஜோ ரூட் (5) மற்றும் அணித் தலைவர் ஹரி புரூக் (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும், அதிரடியாக ஆடிய பென் டக்கெட் 111 பந்துகளில் 105 ஓட்டங்களை குவிக்க, அவருக்கு உறுதுணையாக சாம் கரன் (42) மற்றும் கஸ் அட்கின்சன் (36*) ஓட்டங்களை சேர்த்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 46.4 ஓவர்களில் 241 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையி்ல் 242 என்ற வெற்றியிலக்குடன் களம் புகுந்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது.
ஃபகர் ஷமான் (10), சைம் ஆயூப் (6) மற்றும் பாபர் அசாம் (10) ஆகிய முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 33.5 ஓவர்களில் 154 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டது.
ஆனால், 10வது விக்கெட்டுக்கு ஹாரிஸ் ரவூஃபுடன் (7* ஓட்டங்கள்) இணைந்த ஷதாப் கான் போட்டியை முற்றிலும் தலைகீழாக மாற்றினார்.
கடைசி விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத 89 ஓட்டங்கள் இணைப்பாட்டம் பெற்று அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
ஷதாப் கான் 96 பந்துகளில் 13 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 113 ஓட்டங்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்கள் எடுத்து, 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பாரிய வெற்றியை பதிவு செய்தது.
இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றியடைந்த சேஸிங்கில் 10வது விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் குவித்த ஜோடி என்ற புதிய உலகச் சாதனையை இவர்கள் படைத்தனர்.
இதற்கு முன்னர் 1975 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் டெரிக் முர்ரே - ஆண்டி ரோபர்ட்ஸ் ஜோடி அமைத்த 64* ஓட்டங்களே சாதனையாக இருந்தது.
ஷதாப் கானின் இந்த அசாதாரணமான போராட்டத்தை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
2010ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அப்துல் ரசாக் மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக திசர பெரேரா ஆகியோர் ஆடிய இன்னிங்ஸ்களுக்கு நிகரான ஆட்டம் இதுவென்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
































