Oct 25, 2026 - 06:15 PM

இன்று (25) நள்ளிரவு 12 மணி முதல் மறு அறிவித்தல் வரை ரம்புக்கனை மற்றும் பேராதனை - கம்பளை இடையிலான அனைத்து புகையிரத சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ரம்புக்கனை மற்றும் பேராதனை புகையிரத நிலையங்களுக்கு இடையே, கடிகமுவை புகையிரத நிலையத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டு புகையிரதப் பாதையில் மண் சரிந்து வருவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்பாதையை விரைவில் வழமைக்கு கொண்டுவருவதற்காக நேற்று (24) மற்றும் இன்று ஆகிய இரு தினங்களில் அவசர புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து புகையிரதப் பயணங்களுக்கான முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை, ரம்புக்கனை மற்றும் பேராதனை - கம்பளை இடையிலான அனைத்து புகையிரத சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலப்பகுதியில் பயணிக்கவிருந்த புகையிரதங்களுக்கு கட்டணம் செலுத்தி ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகள், அதற்காகச் செலவழித்த முழுத் தொகையையும் புகையிரத நிலையங்களில் மீளப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
































