Oct 12, 2026 - 05:37 PM

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கன், மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் புதிய சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
மேய்ச்சல் தரைகளிலிருந்து சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதாக முன்னர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என்றும், ஆக்கிரமிப்புகள், மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுதல் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்வதாகவும் தெரிவித்து இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் நீதிமன்றத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு அறிவித்தல்கள் அனுப்பப்படவுள்ளன.
முன்னைய மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கில் சாணக்கியன் இராசமாணிக்கன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், மீண்டும் முன்னிலையாகி அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.






























