Oct 5, 2026 - 08:03 AM

பிரித்தானியாவில் உள்ள RAF ஃபேர்ஃபோர்ட் (RAF Fairford) இராணுவத் தளத்தில் இடம்பெற்ற பயங்கரவாதச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில், அங்கிருந்த தனது அனைத்துக் குண்டுவீச்சு விமானங்களையும் அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது.
குறித்த விமானப்படைத் தளத்திலிருந்து விமானங்கள் அமெரிக்காவிலுள்ள அவற்றின் சொந்த இராணுவத் தளங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதை அமெரிக்க பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி குளொஸ்டர்ஷயர் (Gloucestershire) பகுதியில் அமைந்துள்ள குறித்த விமானப்படைத் தளத்தை நோக்கி மூன்று "சந்தேகத்திற்கிடமான வாகனங்கள்" பயணித்ததாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் லண்டனைச் சேர்ந்த 23 முதல் 25 வயதுடைய ஐந்து பிரித்தானிய பிரஜைகள் வெடிபொருட்கள் வைத்திருந்தமை மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, லண்டனில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய பிரித்தானிய-ஈரானிய பிரஜை ஒருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த திடீர் மீளப் பெறல் தீர்மானத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை அமெரிக்கா வெளியிடவில்லை என்றபோதிலும், ஃபேர்ஃபோர்ட் தளத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே வொஷிங்டன் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிரித்தானிய அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது அரசியல் சார்ந்த தீர்மானமன்றி, இராணுவ செயல்பாட்டு மட்டத்தில் எடுக்கப்பட்டு பிரித்தானிய இராணுவத்துக்கு அறிவிக்கப்பட்ட ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
பல தசாப்தங்களாக அமெரிக்க விமானப்படையின் முன்னணி செயல்பாட்டுத் தளமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் RAF ஃபேர்ஃபோர்ட் தளத்திலிருந்து, அண்மைக்காலமாக ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்காக அமெரிக்க விமானங்கள் இயங்கி வந்தன.
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் எந்தவொரு இராணுவத் தளமும் தமது படைகளின் சட்டப்பூர்வ இலக்காகும் என ஈரான் கடந்த ஜூலை மாதம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.































