Sep 30, 2026 - 11:53 AM

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி கொழும்பு கோட்டை நீதவானால் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர சமர்ப்பித்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று (30) உத்தரவிட்டது.
இருப்பினும், இந்த உத்தரவின் மூலம் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை என்ற பிரதான வழக்கு தொடர்பான மனுதாரரின் நிலைப்பாட்டிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் நீதியரசர்கள் குழாம் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரோஹாந்த அபேசூரிய, சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய படபெதிகே ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரவை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரோஹாந்த அபேசூரிய, நீதவானால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தீர்மானம் இறுதியானது அல்ல. நீதவானின் அந்தத் தீர்மானம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை ஒன்றை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
அதில் முதல் பார்வையில் வழக்குக்கான காரணம் உள்ளமை உறுதிசெய்யப்பட்டால் மட்டுமே எதிர்மனுதாரர் தரப்பிற்கு அழைப்பாணை விடுக்கப்படும்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க நீதிமன்ற நிறுவனங்களை அவமதித்தல் தொடர்பான சட்டத்தின் விதிகளுக்கு அமைய நீதவானுக்கு இத்தகைய தீர்மானத்தை அனுப்பி வைக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
இதன்படி, மனுதாரரினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் முதல் பார்வையில் வழக்குக் காரணம் வெளிப்படவில்லை என்பதால் அதனைத் நிராகரிப்பதாக மூவர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தெரிவித்தது.
இருப்பினும், இந்த உத்தரவின் மூலம் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை என்ற பிரதான வழக்கு தொடர்பான மனுதாரரின் நிலைப்பாட்டிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் நீதியரசர் குழாம் சுட்டிக்காட்டியது.
இதனிடையே, நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடும் இன்று மூவர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அந்த சந்தர்ப்பத்தில் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, அசங்க நவரத்ன, மஹிந்த பத்திரண, சுகீஸ்வர பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி, மனோஹர டி சில்வா, வி.கே. சொக்சி ஆகியோர் நீதிமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்து, தமது கட்சிக்காரர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் அழைப்பாணை விடுப்பதற்காக நீதவானால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டில் முதல் பார்வையில் வழக்குக் காரணம் எதுவும் இல்லை என வலியுறுத்தினர்.
எனவே, நீதவானின் தீர்மானம் குறித்து முடிவொன்றை எடுப்பதற்கு முன்னர் தமது கட்சிக்காரர்களின் கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்குமாறு அந்த ஜனாதிபதி சட்டத்தரணிகள் நீதிமன்றத்தைக் கோரினர்.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, தாம் இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவியாகச் செயற்படுவதாகத் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், இந்த வழக்குக்கு அடிப்படையான செம்மைப்படுத்தப்படாத அனைத்து காணொளிகளையும் அடுத்த வழக்குத் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டது.
அதன் பின்னர், இந்த முறைப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
































